search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினி வருகையால் தி.மு.க.வுக்கு லாபம்: கருத்துக் கணிப்பில் தகவல்
    X

    ரஜினி வருகையால் தி.மு.க.வுக்கு லாபம்: கருத்துக் கணிப்பில் தகவல்

    ரஜினி புதிய கட்சி தொடங்குவதால் அவர் கணிசமான வாக்குகளை பிரிப்பார் என்றும், ரஜினியின் வருகை தி.மு.க.வுக்கு லாபமாக அமையும் என்றும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. #RajinikanthPoliticalEntry #DMK

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு இப்போது தேர்தல் நடந்தால் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று இந்தியா டுடே நிறுவனம் ஒரு கருத்து கணிப்பை நடத்தியது.

    மாநில முழுவதும் பல்வேறு தரப்பினரிடம் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. நேற்று மாலை இந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    இப்போது தேர்தல் நடந்தால் அது தி.மு.க.வுக்கு ஆதாயம் தரும் வகையில் அமையும் என்று அந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. தற்போது சட்டசபையில் தி.மு.க.வுக்கு 98 உறுப்பினர்கள் உள்ளனர். இப்போது தேர்தல் நடந்தால் தி.மு.க.வுக்கு 130 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.


    அதாவது தி.மு.க.வுக்கு 34 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. ரஜினி புதிய கட்சி தொடங்குவதால் அவர் கணிசமான வாக்குகளை பிரிப்பார் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே ரஜினியின் வருகை தி.மு.க.வுக்கு லாபமாக அமையும் என்று தெரிகிறது.

    அரசியலுக்கு வரும் நடிகர்களில் ரஜினி, கமல் இருவரில் யார் தொடங்கும் கட்சிக்கு அதிக ஆதரவு இருக்கும் என்றும் கருத்து கணிப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதில் ரஜினிக்கே அதிக அளவிலான மக்கள் ஆதரவு கிடைத்துள்ளது. இப்போது தேர்தல் நடந்தால் சுமார் 16 சதவீத வாக்குகள் அவருக்கு கிடைக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த அளவு வாக்குகள் கிடைப்பதால் ரஜினியின் கட்சிக்கு 33 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது ரஜினியின் கட்சிக்கு முதல் தேர்தலிலேயே 33 புதுமுக எம்.எல்.ஏ.க்கள் கிடைப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    ரஜினியின் வருகையால் அ.தி.மு.க.வுக்குதான் அதிக பாதிப்பு ஏற்படும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது கடந்த தேர்தலில் ஜெயலலிதாவின் ஆளுமை காரணமாக அ.தி.மு.க. 41 சதவீத வாக்குகளை பெற்று இருந்தது. அந்த வாக்கு சதவீதம் 26 சதவீதமாக குறைந்து விடும் என்று கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

    அந்த வகையில் பார்த்தால் அ.தி.மு.க.வுக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் வெற்றி சதவீதம் பாதியாக குறைந்து விடும் என்று கூறப்படுகிறது. அதாவது 2016 தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 135 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தனர். இப்போது தேர்தல் நடந்தால் அந்த எண்ணிக்கை 68-ஆக குறைந்து விடும் என்று கூறப்பட்டுள்ளது.

    மற்றவர்களுக்கு 3 இடங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது. கமல்ஹாசனுக்கு சொல்லி கொள்ளும்படி தேர்தலில் அதிக வெற்றி பெறும் அளவுக்கு மக்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை என்று கருத்து கணிப்பில் உணர்த்தப்பட்டுள்ளது.

    அதுபோல ரஜினியின் புதிய கட்சி அ.தி.மு.க.- தி.மு.க. இரு கட்சிகளின் வாக்கு வங்கிகளையுமே உடைக்கும் என்று தெரிய வந்துள்ளது. குறிப்பாக அ.தி.மு.க.வுக்கு 41 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக வாக்குகள் குறைவது போல தி.மு.க.வுக்கும் கடந்த தேர்தலில் கிடைத்த 38 சதவீத வாக்குகள் 34 சதவீதமாக குறையும் என்று தெரிகிறது.

    எனவே இப்போது தேர்தல் நடந்தால் தி.மு.க.வுக்கு 4 சதவீத வாக்கு இழப்பு ஏற்படக்கூடும். ஆனால் வாக்குகள் பிரிவதால் தி.மு.க.வுக்கு அதிக இடங்களில் வெற்றி உண்டாகும் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

    விஜயகாந்த் தே.மு.தி.க.வை தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டபோது சுமார் 60 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெறுவதை சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தடுத்து நிறுத்தினார். அதுபோல்தான் ரஜினியின் புதிய கட்சியின் வருகையும் அமையும் என்று கருத்து கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.

    இந்த கருத்து கணிப்பில் முதல்-அமைச்சர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு 50 சதவீதம் பேர் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை குறிப்பிட்டுள்ளனர்.

    தற்போதைய சூழ்நிலையில் முதல்வர் பதவிக்கு அவரை விட்டால் சிறப்பான நபர்கள் வேறு யாரும் இல்லை என்று கருத்து கணிப்பில் பதில் அளித்தவர்களில் பெரும்பாலானவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக ரஜினியை பெரும்பாலானவர்கள் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என்று கூறியுள்ளனர். அந்த வகையில் ரஜினிக்கு 17 சதவீத பேர் ஆதரவு கிடைத்துள்ளது.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 11 சதவீத ஆதரவுடன் 3-வது இடத்தில் இருக்கிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக நீடிக்க 5 சதவீதம் பேரே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    நடிகர் கமல்ஹாசனை நிறைய பேர் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியா டுடே கருத்து கணிப்பில் கமல் முதல்வர் ஆவதற்கு வெறும் 5 சதவீதம் பேர்தான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    அதுபோல டி.டி.வி.தினகரனுக்கும் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அவர் முதல்வர் ஆகலாம் என்று 3 சதவீதம் பேர்தான் சொல்லி உள்ளனர். இதனால் முதல்வர் போட்டியில் டி.டி.வி.தினகரன் கடைசி இடத்தில் இருப்பது இந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. #RajinikanthPoliticalEntry #DMK #tamilnews

    Next Story
    ×