search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பொருள் தாமதத்துக்கு கவர்னர் மாளிகை காரணம் அல்ல: கிரண்பேடி விளக்கம்
    X

    பொங்கல் பொருள் தாமதத்துக்கு கவர்னர் மாளிகை காரணம் அல்ல: கிரண்பேடி விளக்கம்

    இலவச பொங்கல் பொருட்கள் தாமதத்திற்கு கவர்னர் மாளிகை காரணம் அல்ல என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    தமிழகத்தை போல புதுவையிலும் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரே‌ஷன் கார்டுகளுக்கும் இலவச பொருட்கள் வழங்கப்படும்.

    இந்த ஆண்டும் பொங்கல் பொருட்கள் வழங்குவதற்கான கோப்பு 20 நாட்களுக்கு முன்பு அரசின் சார்பில் கவர்னரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது. இந்த கோப்புக்கு கவர்னர் கிரண்பேடி உடனடியாக அனுமதி அளிக்காமல் காலதாமதம் செய்கிறார் என்று அரசு தரப்பில் புகார் கூறப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி இலவச பொங்கல் பொருட்கள் கோப்புக்கு கவர்னர் கிரண்பேடி அனுமதி அளித்தார். இதன் பிறகு பொங்கல் பொருட்களை கொள்முதல் செய்து ரே‌ஷன் கடைகள் மூலம் அரசால் வழங்க முடியவில்லை.

    பொங்கல் பண்டிகை முடிந்த பின்பும் இன்றுவரை இலவச பொருட்கள் புதுவை மக்களுக்கு கிடைக்கவில்லை. இது புதுவை மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் இலவச பொங்கல் பொருட்கள் தாமதத்திற்கு கவர்னர் மாளிகை காரணமல்ல என்று கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார். இதுகுறித்து கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் பொங்கல் பொருட்கள் காலதாமதத்துக்கு கவர்னர் மாளிகையே காரணம் என தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. இந்த கோப்பு செயலர், நிதி செயலர், தலைமை செயலர், அமைச்சர், முதல்-அமைச்சர் ஆகியோரின் அலுவலகங்களில் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே வருகிறது.

    கவர்னர் மாளிகைக்கு வரும் கோப்புகளை கவர்னரின் செயலாளர் ஆய்வு செய்து தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட துறை செயலாளரை அழைத்து விளக்கம் கேட்டு காலதாமதம் இன்றி கோப்பு அனுப்பப்படுகிறது. வாரந்தோறும் கோப்புகள் பெறப்பட்டு, அனுப்பப்பட்ட விபரம் கவர்னர் மாளிகை இணையதளத்திலும் வெளியிடப்படுகிறது.

    பொங்கல் பொருட்களுக்கான கோப்பு முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஜனவரி 8-ந்தேதி கவர்னர் மாளிகைக்கு வந்தது. உரிய ஆய்வுக்கு பின்னர் இதற்கான ஒப்புதல் ஜனவரி 10-ந்தேதி வழங்கப்பட்டது. இப்படி இருக்கும்போது கோப்பு காலதாமதத்துக்கு கவர்னர் மாளிகை எப்படி பொறுப்பேற்க முடியும்.

    எனவே, பொங்கல் பொருட்கள் காலதாமதமாக கவர்னர் மாளிகை தான் பொறுப்பு என்ற தவறான தகவலை பொதுமக்கள் நம்ப வேண்டாம். கவர்னர் மாளிகை எப்போதும் நம்பகத்தன்மை உடைய அலுவலகமாகவே செயல்பட்டு வருகிறது. சாதாரண மனிதருக்கும் நீதி கிடைக்கும் கடைசி அலுவலகமாக கவர்னர் மாளிகை இருந்து வருகிறது.

    இவ்வாறு கிரண்பேடி அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×