search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளால் களைகட்டிய பொங்கல் பண்டிகை
    X

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளால் களைகட்டிய பொங்கல் பண்டிகை

    நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கிராமங்களில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளால் களைகட்டிய பொங்கல் பண்டிகை நெல்லை-04

    தமிழர்களுக்கென்று தனித்துவமான விளையாட்டுகள் இருந்தன என்பதே மெல்ல மெல்ல தமிழர்களுக்கே மறந்து வருகிறது. ஆங்கிலேயரின் ஆட்சி முறையினால் தமிழகத்திலும் தமிழர் சார்ந்த நிலங்களிலும் ஆங்கில விளையாட்டுகள் மேன்மை அடைந்து தமிழர் விளையாட்டுகள் வலுவிழந்து தள்ளப்பட்டன. அவை சல்லிக்கட்டு, பாரி வேட்டை, சிலம்பம், சடுகுடு, ஓட்டம், இளவட்டக்கல், வழுக்குமரம் ஏறுதல், வண்டி ஓட்டம், ஆடுபுலி ஆட்டம், மல், வில், பெண்களுக்கான தாயம், பல்லாங்குழி, தட்டாங்கல், நொண்டியாட்டம், கண்ணாமூச்சி, கிச்சு கிச்சு தாம்பலம், ஊஞ்சல் எனச் சொல்லலாம்.

    நேற்று வரை கிராமப்புற தெருக்களில் இருந்த தட்டாங்கல், நொண்டி யாட்டம், கண்ணாமூச்சி என்பனவற்றை இன்று காணவில்லை. அதற்குக் காரணம் நகர்ப்புறக் காற்றில் கலந்துவிட்ட அந்நிய கலாசாரம் ஆகும். இத்தகைய சூழலில் மறந்துவிட்ட நம் விளையாட்டுக்களை மீண்டும் தமிழர் திருநாளான பொங்கல் விழாவில் காண முடிந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பொங்கலையொட்டி கடந்த 2 நாட்களாக விளையாட்டு போட்டிகள் நடந்தன. கிராமங்களை கலகலக்க செய்த இந்த விளையாட்டு போட்டிகள் தமிழர் பெருமையை உணர்த்தும் வகையில் அமைந்திருந்தன.

    குறிப்பாக விளையாட்டு போட்டிகளில் இடம்பெற்ற வடம் இழுத்தல், பாட்டிலில் நீர் நிரப்புதல், பலூன் உடைத்தல், வழுக்குமரம் ஏறுதல் உள்ளிட்ட போட்டிகளில் சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் பங்கேற் றனர். மியூசிக்கல் சேர் போட்டியில் குழந்தைகள் ஆர்வத்துடன் ஓடி சென்று இருக்கையை பிடிக்கும் காட்சி ஆனந்தமானது.

    பலூன் உடைத்தல் போட்டியில் ஒருவரது பலூனை உடைக்க ஓடும் ஆர்வம் கலகலக்க செய்தது. சைக்கிள் டியூப்களில் காற்றை வெளியேற்றிவிட்டு மெதுவாக சைக்கிளை நகர்த்தும் போட்டியும் நடந்தது. மேலும் தேங்காயை வேகமாக பல்லால் உரிக்கும் போட்டியும் நடந்தது. இதில் இளைஞர்கள் தங்கள் பற்களின் வலிமையை காட்டியது ரசிக்க வைத்தது. இதேபோல கரும்பு கடித்தல் போட்டி, முறுக்கு கடித்தல் போட்டிகள், தண்ணீர் அருந்தும் போட்டிகளும் புதுமையாக இருந்தன.



    தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பம் ஆகிய போட்டிகளும் பொங்கலையொட்டி நடைபெற்றது. சிலம்பப் போட்டியில் இன்றைய இளைஞர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதை பொங்கல் விழாக்களில் காண முடிந்தது. இதேபோல சில பகுதிகளில் வயதான பெரியவர்களுக்கும் கபடி போட்டி நடத்தப்பட்டது. 60 வயதை கடந்த பெரியவர்கள் ஆர்வத்துடன் கபடி விளையாடினர்.

    வடம் இழுத்தல் போட்டி 4 விதமாக நடைபெற்றது. இளைஞர்கள் மட்டும் பங்கேற்ற போட்டி, இளம் பெண்கள் மட்டும் பங்கேற்ற போட்டி, இளைஞர்கள் ஒருபுறமும்,பெண்கள் ஒருபுறமும் நின்று பங்கேற்ற போட்டி, சிறுவர்கள் மட்டும் பங்கேற்ற போட்டி என நடந்த போட்டிகளில் அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றது பலரையும் வியக்க செய்தது.


    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள வடலிவிளையில் பொங்கல்விழாவில் உரலை தூக்கி போட்டு பெண்கள் அசத்தினர். இளவட்டக்கல் தூக்கும் இளைஞர்களுக்கு சவாலாக களம் இறங்கிய இந்த பெண்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இளவட்டக்கல் 45 கிலோ, 50 கிலோ, 90 கிலோ ஆகிய 3 எடைகளில் இருந்தது. இளவட்டகல்லை பொறுத்தவரை நெஞ்சில் படாமல் தூக்க வேண்டும் என்ற விதி உண்டு.


    மேலும் தூக்கியபின் சுமந்து நின்றபடி கீழே போடவேண்டும். அந்த வகையில் வடலிவிளை இளைஞர் தங்கராஜ் 90 கிலோ இளவட்டக்கல்லை 11 முறை தூக்கி போட்டு அசத்தினார். முத்துப்பாண்டி, வெள்ளப்பாண்டி ஆகியோர் 8 முறை இளவட்டக்கல்லை தூக்கினார்கள். இதேபோல் பற்களால் வேகமாக தேங்காய் உரித்த இளைஞர் தினேஷ் முதல் பரிசையும், முருகன் இரண்டாவது பரிசையும் பெற்றனர்.

    ஆலங்குளம் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணப்பேரியில் நடந்த பொங்கல் விழாவில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் காமராஜ்நகர் சிவனணைந்தபெருமாள் 90 கிலோ இளவட்டக்கல்லை 16 முறை தூக்கி போட்டு மக்களை கவர்ந்தார். இவர் தொடர்ந்து 21 ஆண்டுகளாக இந்த இளவட்டக்கல்லை தூக்கி வருகிறார்.


    சுரண்டை அருகே உள்ள சின்னதம்பி நாடாரூர் கிராமத்தில் இளைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்திய விளையாட்டு போட்டிகள் பொதுமக்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சேரன்மகாதேவி முடுக்குத்தெருவில் நடந்த பொங்கல் விழாவில் நடந்த சாக்கு ஓட்டம் பலரையும் ரசிக்க செய்தது. இங்கு பாட்டிலில் நீர் நிரப்புதல், பலூன் உடைத்தல், கைப்பந்து போட்டிகளும், நடன நிகழ்ச்சி களும் நடைபெற்றன.

    இதேபோல தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தியில் இளைஞர்கள் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருவது வழக்கம். இந்தாண்டுக்கான விளையாட்டு போட்டிகள் அங்குள்ள மைதானத்தில் நடைபெற்றது. மாட்டுப் பொங்கலை முன்னிட்டு தங்கள் வளர்க்கும் மாடு களுக்கு மரியாதை செய்யும் விதமாக போட்டிகள் ஆரம்பிக்கு முன்பு கிராமத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வளர்க்கும் மாடுகளுடன் மைதானத்தில் வலம் வந்தனர்.


    தொடர்ந்து சிறுவர்- சிறுமியர்களுக்கான மியூசிக்கல் சேர், சாக்கு போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடை பெற்றது. இதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, இளவட்டக் கல்லை தூக்கி 3 முறை மைதானத்தினை சுற்றி வந்து அசத்தினர். மேலும் இளைஞர்களுக்கான கபடி போட்டியும் நடைபெற்றது. இறுதியில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.

    பொதுவாக மாறி வரும் கம்ப்யூட்டர் யுகத்தில் இன்னமும் கிராமங்களில் மக்கள் பண்டைய தமிழர் களின் பாரம்பரிய வழக்கங் களை பொங்கல் விழாக் களில் நடத்தி வருவது தமிழரின் பெருமையை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை. #tamilnews

    Next Story
    ×