search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னையில் தடையை மீறி ‘குட்கா’ விற்பனை
    X

    சென்னையில் தடையை மீறி ‘குட்கா’ விற்பனை

    குட்கா லஞ்சம் அம்பலமானதால் சென்னையில் குட்கா விற்பனை சிறிது நாட்களுக்கு தடைபட்டு இருந்தது. சமீப காலமாக சில பெரிய கடைகளிலும் கூட குட்கா கிடைப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    குட்கா, பான் மசாலா போன்ற புகை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று தமிழ்நாட்டில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இந்த தடையை மீறி குட்கா மிக தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    குட்கா விற்பதற்கு அரசியல்வாதிகளும், போலீஸ் உயர் அதிகாரிகளும் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதிப்பதாக கடந்த 2016-ம் ஆண்டு புகார்கள் அதிகரித்தன. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோன்களில் அதிரடி வேட்டை நடத்தினார்கள்.

    அப்போது குட்கா விற்பனையில் மிகப்பெரிய ஊழல் நடப்பது தெரிந்தது. அமைச்சர் ஒருவரும், கமி‌ஷனராக இருந்த ஒருவரும் பல லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு குட்கா விற்பதற்கு அனுமதி கொடுத்தது ஒரு டைரி மூலம் அம்பலமானது.

    இது தொடர்பான வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

    குட்கா லஞ்சம் அம்பலமானதால் சென்னையில் குட்கா விற்பனை சிறிது நாட்களுக்கு தடைபட்டு இருந்தது. ஆனால் தற்போது மீண்டும் குட்கா விற்பனை கொடி கட்டி பறக்க தொடங்கியுள்ளது. போலீசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு மீண்டும் குட்கா விற்க அனுமதிப்பதாக தெரிய வந்துள்ளது.

    முன்பெல்லாம் குட்கா, பான் மசாலா போன்றவைகளை பெட்டி கடைக்காரர்கள் மறைத்து வைத்துக் கொண்டு வியாபாரம் செய்து வந்தனர். ஆனால் தற்போது எந்தவித பயமுமின்றி வெளிப்படையாகவே குட்காவை விற்கிறார்கள். இதனால் சென்னை முழுவதும் குட்கா தங்கு தடையின்றி மிக தாராளமாக கிடைக்கிறது.

    குட்கா, பான் மசாலா போன்றவை பெரும்பாலும் செங்குன்றம் பகுதியில் உள்ள குடோன்களில்தான் இருப்பு வைக்கப்படுகிறது. தடை இருந்தாலும் குட்கா மிக தாராளமாக அந்த பகுதியில் தயாராகிறது. தேவையான அளவுக்கு இருப்பு வைக்கிறார்கள். மேலும் எந்த பிரச்சினையும் இல்லாமல் செங்குன்றத்தில் இருந்து சென்னை முழுக்க சாலை வழியாக எளிதாக எடுத்து செல்கிறார்கள்.

    அதுபோல கடைக்காரர்கள் முன்பு தெரியாதவர்களுக்கு குட்கா கொடுக்க மாட்டார்கள். ஆனால் இப்போது யார் கேட்டாலும் குட்கா கிடைக்கிறது. குட்கா விற்றால் 200 சதவீதம் லாபம் என்பதால் பெரும்பாலான பெட்டி கடைக்காரர்கள் அவற்றை வாங்கி விற்க தயங்குவது இல்லை.

    குட்கா லஞ்ச விவகாரம் கடந்த ஆண்டு அம்பலமானபோது பெயருக்கு கடைகளில் போலீசார் சோதனை நடத்தினார்கள். குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இருந்தாலும் மீண்டும் குட்கா விற்பனை தடையின்றி நடக்கத்தான் செய்கிறது. அதுவும் கடைக்காரர்கள் வெளிப்படையாகவே குட்கா, பான் மசாலாவை விற்கிறார்கள்.

    குட்கா விற்பதற்கு மீண்டும் போலீசார் லஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் அதன் விற்பனையை தடுக்க இயலாது என்கிறார்கள். சமீப காலமாக சில பெரிய கடைகளிலும் கூட குட்கா கிடைப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    குட்கா விற்பனையை தடுக்க முடியும். குட்காவின் உறைவிடமாக செங்குன்றம் திகழ்கிறது. அங்குள்ள குடோன்களை சீல் வைத்தாலே சென்னையில் உள்ள 90 சதவீத குட்கா விற்பனைக்கு முடிவு கட்ட முடியும்.

    ஆனால் கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் தமிழ்நாட்டுக்குள் குட்கா கொண்டு வரப்படுகிறது. அவற்றையும் தடுத்தால்தான் குட்காவுக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.

    இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். #tamilnews

    Next Story
    ×