search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி, முல்லை பெரியாறு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் - துரைமுருகன் கடும் வாக்குவாதம்
    X

    காவிரி, முல்லை பெரியாறு விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் - துரைமுருகன் கடும் வாக்குவாதம்

    தமிழக சட்டசபையில் இன்று காவிரி மேலாண்மை வாரியம், முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் - துரைமுருகன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    சென்னை:

    சட்டசபையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ. பழனிவேல் தியாகராஜன் பேசும் போது, “மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்க கூடாது” என்றார்.

    அப்போது குறுக்கிட்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், “தி.மு.க. ஆட்சியில் தான் மாநில உரிமைகள் விட்டுக் கொடுக்கப்பட்டன. இதனால் இழந்த காவிரி, முல்லைப் பெரியாறு உரிமைகளை மீட்டுக் கொடுத்தவர் புரட்சித் தலைவி அம்மா, காவிரி உரிமையை மீட்பதற்காக உண்ணாவிரதம் இருந்தார். சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய தண்ணீரை பெற நடவடிக்கை எடுத்தார்.

    முல்லை பெரியாறு அணையில் 136 அடியை 142 அடியாக உயர்த்த சுப்ரீம் கோர்ட்டு மூலம் தீர்ப்பு பெற்றுத்தந்தார்” என்றார்.

    அப்போது துரைமுருகன் குறுக்கிட்டு, “தனக்கு பேச அனுமதி வழங்க வேண்டும்” என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. உறுப்பினர்கள் ரங்கநாதன், அன்பழகன் ஆகியோர் எழுந்து நின்று குரல் கொடுத்தனர். அவர்களை சபாநாயகர் கடுமையாக எச்சரித்தார்.



    இதற்கிடையே ஓ.பன்னீர் செல்வத்துடன் துரைமுருகன் கடுமையாக வாக்குவாதம் செய்தார். பின்னர் துரைமுருகனுக்கு பேச சபாநாயகர் வாய்ப்பு அளித்தார்.

    துரைமுருகன்:- காவிரியில் உரிமையை பெறுவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தவர் அப்போது முதல்வராக இருந்த கலைஞர்தான். அப்போது ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததால் காவிரி பிரச்சினை தீரவில்லை. தி.மு.க. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

    கலைஞரால்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இது போல முல்லை பெரியாறு அணை தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர் கலைஞர். தீர்ப்பு வரும் போது ஆட்சியில் இருந்தது ஜெயலலிதா. நாங்கள்தான் முயற்சி எடுத்தோம்.

    இவ்வாறு விவாதம் நடந்தது.
    Next Story
    ×