search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்கோட்டையனை முதலமைச்சர் ஆக்கவே கவர்னரிடம் மனு கொடுத்தோம்: டி.டி.வி. தரப்பு வக்கீல் வாதம்
    X

    செங்கோட்டையனை முதலமைச்சர் ஆக்கவே கவர்னரிடம் மனு கொடுத்தோம்: டி.டி.வி. தரப்பு வக்கீல் வாதம்

    எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு செங்கோட்டையனை முதல்-அமைச்சர் ஆக்கவே கவர்னரிடம் மனு கொடுத்தோம் என்று டி.டி.வி.தினகரன் தரப்பு வக்கீல் ஐகோர்ட்டில் வாதாடினார்.
    சென்னை:

    டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்த வழக்கின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    தமிழக அரசு கொறடா ராஜேந்திரன் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தஹியும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன், டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் பி.எஸ்.ராமனும் ஆஜராகி வாதாடினர்.

    அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

    வக்கீல் சி.எஸ்.வைத்தியநாதன்:- சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர முடியாது.

    வக்கீல் பி.எஸ்.ராமன்:- சபாநாயகரின் நோட்டீசுக்கு பதில் அளிக்க கால அவகாசம் தரவில்லை. புகார் அளித்த அரசு கொறடா, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட 4 பேரை குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கோரினோம். அதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. நாங்கள் கேட்ட ஆவணங்களையும் சபாநாயகர் தரவில்லை. கவர்னரிடம் மனு கொடுத்தோம் என்ற ஒரே காரணத்தை கூறி தகுதி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    நீதிபதிகள்:- எதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்தீர்கள்?.

    பி.எஸ்.ராமன்:- எடப்பாடி பழனிசாமி மீது பல்வேறு ஊழல் புகார் இருப்பதால் அவரை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் மனு கொடுத்தோம்.



    நீதிபதிகள்:- கவர்னரிடம் மனு கொடுத்தது சரியா?, தவறா?.

    பி.எஸ்.ராமன்:- கவர்னரிடம் மனு கொடுத்தது சரியா?, தவறா? என்பது பிரச்சினை அல்ல. கவர்னரிடம் மனு கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையில் கொடுத்தோம். அரசியல் அமைப்பு சட்டத்தின்படி மாநிலத்தின் அதிக அதிகாரம் உள்ளவரிடம் மனு கொடுத்தோம். கவர்னரிடம் மனு கொடுத்ததற்காக பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியாது. கட்சியில் இருந்து நீக்கம் செய்யலாம்.

    நீதிபதிகள்:- எடப்பாடி பழனிசாமியை நீக்கிவிட்டு யாரை முதல்-அமைச்சர் ஆக்க வேண்டும் என்று மனு கொடுத்தீர்கள்?.

    பி.எஸ்.ராமன்:- கட்சியின் மூத்த உறுப்பினர் செங்கோட்டையனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று விரும்பியே கவர்னரிடம் மனு கொடுத்தோம்.

    இவ்வாறு வாதம் நடந்தது.

    இதன்பின்பு, இறுதி வாதத்துக்காக வழக்கை நாளை (வெள்ளிக்கிழமை) தள்ளிவைத்தனர். #tamilnews
    Next Story
    ×