search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது? ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி
    X

    குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது? ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

    குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது? என்று ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
    சென்னை:

    தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    ‘சென்னையில் குட்கா, பான்மசாலா நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த ஆண்டு நடத்திய சோதனையில் ரூ.250 கோடி அளவுக்கு தமிழகத்தில் வர்த்தகம் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா தயாரிப்பாளரான மாதவராவிடம் பெறப்பட்ட ரகசிய குறிப்பில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உள்பட பலருக்கு லஞ்சம் வழங்கியதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

    லஞ்சம் பெற்றுக்கொண்டு தமிழக அதிகாரிகள் சட்டவிரோதமாக குட்கா விற்பனையை ஊக்குவித்து வந்துள்ளனர். இந்த ஊழலில் தொடர்புடையவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மத்திய கலால் துறை பதில் மனு தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய கலால் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.



    அதில், ‘டெல்லியில் உற்பத்தி செய்யப்படும் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் சட்ட விரோதமாக தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு விற்கப்படுகிறது. இதற்கான பணம் ஹவாலா முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.55 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்து உள்ளது. இதுகுறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது’ என்று கூறப்பட்டிருந்தது.

    விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், ‘கடந்த 2016-ம் ஆண்டு அப்போதைய போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், தமிழக உள்துறை செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், குட்கா ஊழலில் மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், இதுகுறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறி உள்ளார் என்று தெரிவித்து, ஜார்ஜ் எழுதிய எழுதிய அந்த கடிதத்தை நீதிபதிகளிடம் கொடுத்தார்.

    இதைதொடர்ந்து நீதிபதிகள், குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், வழக்கு விசாரணையை 12-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். 
    Next Story
    ×