search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை தடுப்பை இழுத்தபடியே மோட்டார்சைக்கிளை ஓட்டிச்செல்லும் வாலிபர்கள்
    X

    சாலை தடுப்பை இழுத்தபடியே மோட்டார்சைக்கிளை ஓட்டிச்செல்லும் வாலிபர்கள்

    மெரினா - கோட்டூர்புரத்தில் சாலை தடுப்பை இழுத்தபடியே மோட்டார் சைக்கிளை ஓட்டிச்செல்லும் வாலிபர்களை வீடியோ காட்சிகள் வைத்து கைது செய்ய போலீசார் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னையில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபடும் வாலிபர்கள் மின்னல் வேகத்தில் செல்வது வாடிக்கையாகி விட்டது.

    குறிப்பிட்ட ஒரு இடத்தில் இருந்து பந்தய குதிரைகளை போல புறப்படும் இந்த இளைஞர்கள் வாகன நெரிசல், நடந்து செல்பவர்கள் என யாரையுமே பொருட்படுத்துவதில்லை. கண்ணை மூடிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் குறுக்கும் நெடுக்குமாக அச்சுறுத்தும் வகையில் பயணிப்பார்கள்.

    இவர்களை கட்டுப்படுத்த போலீசார் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் பைக்ரேசில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்துவது இயலாத காரியமாகவே உள்ளது.

    இந்த நிலையில் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலர் தடுப்புகளை இழுத்தபடியே மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் செல்லும் காட்சிகள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    மெரினா கடற்கரை- கோட்டூர்புரம் ஆகிய 2 இடங்களில் இது போன்ற சம்பவங்களில் இளைஞர்கள் ஈடுபட்டது தெரியவந்தது. சாலை தடுப்பை இழுத்துக் கொண்டே மோட்டார்சைக்கிளை ஓட்டிச் செல்வதை பின்னால் இருந்து அந்த வாலிபர்களின் நண்பர்களே செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள்தான் இப்போது பரவி வருகிறது.

    இரும்பினால் ஆன சாலை தடுப்பை இளைஞர்கள் இழுத்துச் செல்லும் போது சாலையில் தீப்பொறி பறக்கிறது. இந்த வீடியோவை பார்க்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. அய்யோ.... என்று அலற வைக்கிறது.

    மெரினா கடற்கரை சாலையில் இளைஞர்கள் சாலை தடுப்பை இழுத்துச் செல்லும் போது ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களும் செல்கின்றன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இச்செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் யார்? என்பது தெரியவில்லை.

    இந்த வீடியோ உயர் போலீஸ் அதிகாரிகளின் செல்போனிலும் பரவியது. இதைபார்த்து அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை கண்டுபிடிக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.

    இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமி‌ஷனர் அருணிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

    சாலை தடுப்புகளை இழுத்துச் சென்ற வாலிபர்கள் யார்? என்பது பற்றி கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்து ஆய்வு செய்து வருகிறோம். இது போன்ற செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×