search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள்: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்
    X

    திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள்: முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்

    எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வரும் நிலையில், அம்மாவட்டத்திற்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    திண்டுக்கல்:

    தமிழக அரசின் சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    விழா மேடையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். இது தொடர்பான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    1) திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வருவாய் வட்டத்தைப் பிரித்து குஜிலியம்பாறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்படும்.

    2) திண்டுக்கல் காவேரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை திண்டுக்கல் மாநகராட்சி உட்பட 7 பேரூராட்சிகள் மற்றும் 816 ஊரக குடியிருப்புகளுக்கு விரிவாக்கம் செய்யும் பொருட்டு விரிவான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

    3) வேடசந்தூர் பேரூராட்சியில் 1.5 கோடி ரூபாய் மதிப்பில் வடிகால்கள் அமைக்கப்படும். 2018-19ம் ஆண்டு மூலதன மான்ய நிதியின் கீழ் ஒதுக்கீடு பெறப்பட்டு, இப்பணி மேற்கொள்ளப்படும். இதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

    4) குஜிலியம்பாறை ஒன்றியம், ஆர்.பில்லமநாயக்கன் பட்டியிலும், வடமதுரை ஒன்றியம், புத்தூரிலும் புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும்.  

    5) சித்தமருத்துவ படிப்பிற்கு உள்ள கூடுதல் தேவையை கருத்திற்கொண்டு 60 மாணவர்கள் படிக்கும் வகையில் பழநியில் ஒரு புதிய சித்த மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்

    6) வேடசந்தூர் ஒன்றியம், ரெங்கநாதபுரத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும்.

    7) ஜேஐசிஏ திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு 11.68 கோடி ரூபாய் மதிப்பில் அதிநவீன உபகரணங்கள் வழங்கப்படும்.

    8) திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 28.5 கோடி ரூபாய் மதிப்பில் மருத்துவ பட்ட மேற்படிப்பு துவங்குவதுடன், தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    9) திண்டுக்கல் மாவட்டம் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் புதிய கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பள்ளி அமைக்கப்படும்.

    10) 82.5 லட்சம் ரூபாய் மதிப்பில் வளரிளம் பருவத்தினர் பாதுகாப்புத் திட்டம், மருந்து கிடங்கு விரிவாக்கம் செய்யப்படும்.

    11) நிலக்கோட்டை மற்றும் வடமதுரை வட்டாரங்களில் விரிவான ஆரம்ப நல்வாழ்வு சேவைகள் வழங்கப்படும்.

    12) அம்மையநாயக்கனூர் சமுதாய சுகாதார நிலையத்தில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.     
    13) கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் அமைக்கப்படும்.

    14) பழனி அரசு மருத்துவமனையில் நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படும்.

    15) ஆத்தூர் அரசு மருத்துவமனையில் 8.22 லட்சம் ரூபாய் மதிப்பில் டயாலிசிஸ் கருவி வழங்கப்படும்.  

    16) நத்தம் கிராமத்தில் திருமணி முத்தாற்றின் குறுக்கே அமைந்துள்ள காட்டு பெரியகுளம் அணைக்கட்டினை 3 கோடி ரூபாய் மதிப்பில் திரும்பக் கட்டப்படும்.

    17) நத்தம் வட்டம், கோசுகுறிச்சி கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலூத்துகுளம் அணைக்கட்டினை 2.72 கோடி ரூபாய் மதிப்பில் திரும்பக் கட்டப்படும்.
     
    18) ஒட்டன்சத்திரம் வட்டம், விருப்பாக்சி கிராமத்தில் நங்காஞ்சியார் ஆற்றின் குறுக்கே 1.33 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்படும்.

    19) நிலக்கோட்டை வட்டம், சித்தர்கள் நத்தம் கிராமத்தில் வைகை ஆற்றின் குறுக்கே எல்.எஸ்.35.05 கி.மீ-ல் 12.5 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்படும்.

    20) நிலக்கோட்டை வட்டம், குன்னவராயன்கோட்டை கிராமத்தில் உச்சப்பட்டியின் அருகே மஞ்சளாறு ஆற்றின் குறுக்கே 2.5 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்படும்.

    21) நிலக்கோட்டை வட்டம், கனவாய்பட்டி கிராமத்தில் நெடுகை மஞ்சளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும். 

    22) நத்தம் வட்டம், முளையூர் கிராமத்திற்கு அருகே திருமணிமுத்தாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.

    23) நத்தம் வட்டம், புன்னப்பட்டி கிராமத்திற்கு அருகே காட்டுப் பெரியகுளம் அணைக்கட்டிற்கு கீழ்புறத்தில் திருமணிமுத்தாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.

    24) நிலக்கோட்டை வட்டம், கொன்னம்பட்டி கிராமத்தில், இராவூத்தர் தோட்டத்திற்கு அருகே மருதாநதி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.

    25) ஒட்டன்சத்திரம் வட்டம், ஜவ்வாதுப்பட்டி கிராமத்தில், நங்காஞ்சியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.

    26) ஆத்தூர் வட்டம், வேலகவுண்டன்பட்டி அருகே சீவல்சரகு கிராமத்தில் குடகனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும்.

    27) வேடசந்தூர் வட்டம், மாரம்பாடி கிராமத்தில் வேலம்பாடி குடியிருப்பு அருகே சந்தானவர்தினி ஆற்றின் குறுக்கே 4.5 கோடி ரூபாய் மதிப்பில் தடுப்பணை கட்டப்படும். 

    28) மோர்பட்டி-சித்துவார்பட்டி சாலையில் சிறுபாலம் கட்டப்படும்.

    29) வடமதுரை-வேலாயுதம் பாளையம் செங்குறிச்சி சாலையில் பாலம் கட்டப்படும்.

    30) பழனி-கொழுமம் சாலையில் பிரிந்து சின்னகாந்திபுரம் வழியாக செல்லும் சண்முகம்பாறை சாலையில் பாலம் கட்டப்படும்.

    31) அம்பிளிக்கை-குத்திலுப்பை சாலையில் பாலம் கட்டப்படும்.  

    32) சக்கையநாயக்கனுhர் - ஜங்கில்பட்டி வழியிலுள்ள, அழகம்பட்டி சாலையில்  பாலம் கட்டப்படும்.

    33) கள்ளிமந்தையம்-ஓடைப்பட்டி சாலையில் 3 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டப்படும்.

    34) அய்யலுhர்-ஆலம்பட்டி சாலை கிமீ 7/2-ல் 2.5 கோடி ரூபாய் மதிப்பில் பாலம் கட்டப்படும்.

    35) திண்டுக்கல்-குஜிலியம்பாறை-கரூர் சாலையில் உள்ள ரயில்வே கடவு எண்.6க்கு மாற்றாக வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை 16.18 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும்.

    36) திண்டுக்கல் நகருக்கு புறவழிச்சாலை 19.25கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படும். இப்பணிக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான நில எடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

    37) பழனி தாராபுரம் சாலையில் உடுமலைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கிடையே உள்ள கடவு எண்.63க்குப் பதிலாக ரயில்வே மேம்பாலம் கட்டப்படும். இப்பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    38) திண்டுக்கல் மின்பகிர்மான வட்டத்தில் புதிய நத்தம் உதவி மின் பொறியாளர் அலுவலகங்கள் மற்றும் மின் கட்டண வசூல் மையம்,  

    39) திண்டுக்கல் மின் பகிர்மான வட்டம் சின்னலூப்பை, சின்னாளப்பட்டி, மற்றும் லட்சுமணப்பட்டியில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். 

    40) வாகரை, கோவிலூர், எரியோடு, அய்யலூர், இராமராஜபுரம், மற்றும் அய்யம்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் திறன் உயர்த்தப்பட்ட மின் மாற்றிகள் அமைக்கப்படும்,

    41) சித்தர்கள் நத்தம் துணை மின் நிலையம் 2.49 கோடி ரூபாய் செலவில் திறன் உயர்த்தப்படும்.

    42) திண்டுக்கல் மின் பகிர்மான வட்டத்தில் புதிதாக கணினி முறையில் மின் தடை பழுது நீக்கும் மையம் நிறுவப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×