search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    50 சதவீத மானியத்தில் ஒரு லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
    X

    50 சதவீத மானியத்தில் ஒரு லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    ஜெயலலிதா பிறந்தநாளில் 50 சதவீத மானியத்தில் ஒரு லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    ஊட்டி:

    ஜெயலலிதா பிறந்தநாளில் 50 சதவீத மானியத்தில் ஒரு லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    ஊட்டியில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது-

    இன்றைக்கு மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அரசு, அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவர் உயிருடன் இருந்தபோது படித்த இளம்பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

    அந்த திட்டம், ஜெயலலிதா பிறந்த நாளான வருகிற பிப்ரவரி மாதம் 24-ந்தேதி தொடங்கி வைக்கப்படும். அம்மா இருசக்கர வாகனம், பாதி விலை மானியத்தில், ஒரு ஸ்கூட்டர் ரூ.50,000 என்றால், ரூ.25,000 மானியமாக வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். முதலில் ஒரு லட்சம் பெண்களுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்படும்.

    அ.தி.மு.க ஐ.சி.யு.வில் இருப்பது போல பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சொல்லியிருக்கின்றார், அவர் டாக்டர், அப்படித்தான் கண்ணுக்குத் தெரியும், சிந்தனை அப்படித்தான் வரும்.

    2018-ல் ஊழலற்ற நிர்வாகமாக கொண்டுவரவேண்டுமென்று இவர்கள் சொல்கிறார்கள். இவர்கள் மேல் இருக்கின்ற சி.பி.ஐ. வழக்கு முடியட்டும். ஊழலை ஒழிப்போம் என்று சொல்பவர் தன் மீது இருக்கும் ஊழல் குற்றச்சாட்டை இல்லை என்று நிரூபித்துக்காட்டவேண்டும், அதற்குப்பின் சொன்னால் சரியாக இருக்கும். முதலில் அவர்கள் திருந்தட்டும்.

    இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக இருக்கின்றது என்பதற்கு ஒரு சான்று, தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டு இருக்கும் ஒரு செய்தி. அந்த அறிக்கையில், இந்தியாவிலுள்ள 6 மெட்ரோ நகரங்களில், பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உகந்த முதல் பெருநகரமாக இருப்பது தமிழ்நாட்டினுடைய சென்னை மாநகரம் தான்.

    பெண்களுக்கு எதிரான குற்றங்கள் டெல்லியில் 25.7 சதவீதம், மும்பையில் 6.4 சதவீதம், கொல்கத்தாவில் 3.5 சதவீதம் உள்ளது. இதுவே சென்னையில் 2 சதவீதமாக உள்ளது. அதுபோலவே அகில இந்திய அளவில் உள்ள பெரிய மாநிலங்களில் தமிழ்நாட்டு பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த முதல் மாநிலம் தமிழ்நாடு என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றது. ஆகவே, சட்டம், ஒழுங்கு எந்தளவிற்கு பேணிக்காக்கப்படுகின்றது என்பதற்கு இதுவே சான்று என்று இந்த நேரத்திலே தெரிவிக்க விரும்புகின்றேன்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    Next Story
    ×