search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டவில்லை
    X

    போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டவில்லை

    போக்குவரத்து ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக நடந்த 11-வது கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 3-ந் தேதி நடைபெறுகிறது.
    தாம்பரம்:

    போக்குவரத்து ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து 11-வது கட்டமாக பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக்கழக பயிற்சி மையத்தில் நேற்று மாலை நடைபெற்றது.

    போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலர் டேவிதார், நிதித்துறை துணை செயலர் ஆனந்தகுமார், போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள், தொழிலாளர் நலத்துறை தனி துணை கமிஷனர் யாஸ்மின் பேகம் மற்றும் அண்ணா தொழிற்சங்க பேரவை, தொழிலாளர் முன்னேற்ற பேரவை, சி.ஐ.டி.யு. உள்ளிட்ட 45 தொழிற்சங்கத்தினர் இதில் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில், தொழிலாளர்களிடம் பிடிக்கப்பட்ட ரூ.7,500 கோடியை உடனே வழங்கி, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும் என தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

    ஆனால் அரசு 3 யோசனைகளை தெரிவித்தது. தரஊதியத்துடன் 2.35 சதவீத உயர்வு என்றால் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 2.44 சதவீத உயர்வு எனில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 2.57 சதவீத உயர்வு வழங்கினால் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஊதிய ஒப்பந்தம் நிர்ணயிக்கப்படும் என்றது.

    இதையடுத்து தொழிற்சங்கத்தினர் வெளியில் சென்று ஆலோசனை நடத்திவிட்டு, பின்னர் மீண்டும் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர். அப்போது 2.57 சதவீத உயர்வுடன், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.



    போக்குவரத்து துறை அமைச்சரும் அதிகாரிகளுடன் தனியாக ஆலோசனை நடத்திய பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. தொழிற்சங்கத்தினர் தங்களின் கோரிக்கையில் உறுதியாக இருந்தனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மற்றும் நிதித்துறை செயலாளரிடம் பேசி ஜனவரி 3-ந் தேதி நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின்போது முடிவு அறிவிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனால் முடிவு எதுவும் எட்டப்படாமல் இரவு 8.45 மணியளவில் பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

    கூட்ட முடிவில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    சென்ற முறை நடந்த பேச்சுவார்த்தையில் அடிப்படை சம்பளத்தில் 2.35 சதவீதம் ஊதிய உயர்வு கொடுப்பதாக உறுதி அளித்து இருந்தோம். தொழிற்சங்கத்தினர் அது போதாது, அதிகமாக கொடுக்க வேண்டும் என்றனர். இப்போது 2.44 சதவீதம் (4 ஆண்டுக்கு), அதாவது குறைந்தபட்சமாக ரூ.1,468, அதிகபட்சமாக ரூ.6,938 கிடைக்கும் வகையில் அறிவித்தோம்.

    தொழிற்சங்கத்தினர் 2.57 சதவீதம் ஊதிய உயர்வு 3 ஆண்டுக்கு ஒரு முறை ஒப்பந்தம் என கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி 3-ந் தேதி நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தையின்போது தெரிவிப்பதாக அறிவித்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    11 தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க தலைவர் சவுந்திரராஜன் கூறுகையில், “நிலுவை தொகையை ஆண்டுக்கு ரூ.1,500 கோடி அளவுக்கு கொடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இப்போது பிடிக்கும் பணத்தை ஏப்ரல் மாதத்தில் இருந்து கட்டுவதாக அமைச்சர் உறுதி அளித்தார். 3-ந் தேதி வரை நாங்கள் காத்திருப்போம். அதன் பின்னரும் அரசு எங்கள் கோரிக்கையை ஏற்க மறுத்தால் போராட்டத்தை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்றார். 
    Next Story
    ×