search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்குகளை பெற மக்களை சீண்டி விட்டு, சிண்டு முடியலாமா...?- தலையங்கம்
    X

    வாக்குகளை பெற மக்களை சீண்டி விட்டு, சிண்டு முடியலாமா...?- தலையங்கம்

    அரசியல் கட்சிகள் மக்களின் வாக்குகளை பெற என்ன சொன்னால் எடுபடும்? என்ன செய்தால் எடுபடும்? என்று நாடி பிடித்து பார்த்து திட்டமிட்டுதான் செயல்படுகின்றன.

    சென்னை: 

    மதச்சார்ப்பு...!

    மதச்சார்பின்மை..!!

    - இந்த இரண்டு வார்த்தைகளும் அரசியல் கட்சிகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள்!

    சொல்லப்போனால் இந்த வார்த்தைகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்துவது அவர்கள் செய்து கொண்ட சத்தியத்தை மீறுவதாகும்.

    ஓட்டு மொத்த மக்களின் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு மக்கள் பிரதிநிதியும் நாட்டு மக்களுக்கு செய்து கொடுக்கும் சத்தியம், நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்டு சாதி,மத, இன வேற்றுமைகளை கடந்து பணியாற்றுவேன் என்பது தான்.

    அந்த சத்தியத்தை எல்லா கட்சிகளும் கடைபிடிக்கின்றனவா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி வருகிறது.

    அண்மையில் நடந்து முடிந்த குஜராத் தேர்தலில் நடந்த சுவாரஸ்யம் ‘நான் சிவ பக்தன்’ என்று ராகுல் சொன்னார். தேர்தல் பிரசாரத்தின் போது 27 கோவில்களுக்கு சென்று வழிபட்டு நானும் ஒரு இந்து என்று மக்களிடம் பிரகடனப்படுத்தினார்.

    அந்த பிரசாரம் கை கொடுத்ததால் அடுத்து வர இருக்கும் கர்நாடகா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் தேர்தல்களிலும் அதே ‘பார்முலாவை’ கடைப்பிடிக்க காங்கிரஸ் தலைவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள்.

    பணம் கொடுத்து ஓட்டு வாங்க திருமங்கலம் பார்முலா! மனதை கெடுத்து ஓட்டு வாங்க குஜராத் பார்முலா! சபாஷ் ஜனநாயக வளர்ச்சிக்கு அற்புதமான பார்முலாக்கள்...!

    மதவாதத்தை முறியடிப்போம் என்று எல்லா கட்சிகளும் சொல்கின்றன. ஆனால் செய்கின்றனவா? ஏதோ ஒரு வகையில் எல்லா கட்சிகளும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மதசார்புடையதாகவும், சாதி சார்புடையதாகவும் தான் செயல்படுகின்றன என்பதை மனசாட்சிப்படி மறுக்க முடியுமா?.

    இந்துத்வா கொள்கையை தாங்கிப்பிடிக்கிறது பாரதிய ஜனதா என்ற குற்றச்சாட்டு பலமாக முன் வைக்கப்படுகிறது. அது உண்மையும் கூட.

    அரசியல் கட்சிகள் மக்களின் வாக்குகளை பெற என்ன சொன்னால் எடுபடும்? என்ன செய்தால் எடுபடும்? என்று நாடி பிடித்து பார்த்து திட்டமிட்டுதான் செயல்படுகின்றன.

    கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பேசும் போது கர்நாடகாவில் தான் இந்து அமைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

    என் பெயரிலேயே கடவுள் பெயர் இருக்கிறது. நான் நூறு சதவீதம் இந்து என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

    யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம். மதங்களுக்கு அப்பாற்பட்டும் இருக்கலாம். அது அவரவர் விருப்பம் சார்ந்தது.

    ஆனால் தலைவர்கள் கூட கோவிலுக்கு சென்று நான் இந்து தான் என்றும், பள்ளிவாசல்களுக்கு சென்று நான் இஸ்லாமியர் என்றும், தேவாலயங்களுக்கு சென்று நான் கிறிஸ்தவர் என்றும், புத்த விஹார்களுக்கு சென்று நான் பவுத்தன் என்றும் தன்னை அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் ஏன்? மத நம்பிக்கை கொண்ட எல்லோரும் பக்தர்கள் தான். கடவுளின் பிள்ளைகள் தான். மத நம்பிக்கை இல்லாதவர்கள் இயற்கை பக்தர்கள் அவ்வளவு தானே? ஆனால் இப்படி வே‌ஷம் போட்டால் தான் ஓட்டு கிடைக்கும். அதன் மூலம் வெற்றி பெற முடியும். ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நம்பிக்கை தானே! இப்படியெல்லாம் நடிக்க வைக்கிறது!

    ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை காணும் தேசம் இது!

    இங்கு எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு என்ற நம்பிக்கை மீது கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லையா? அல்லது அந்த நம்பிக்கையை தகர்த்தாவது பதவியை பிடிக்க வேண்டும் என்ற ஆசையா?

    சாதி, மத உணர்வுகள் எளிதில் உணர்ச்சி வசப்படுத்துவது. அப்படி மக்களை வசியப்படுத்தும் தவறான வழிமுறைகளை எந்த கட்சியும் நினைத்து கூட பார்க்க கூடாது.

    குஜராத்தில் பா.ஜனதாவின் தொடர் வெற்றிக்கு காரணம் இந்துக்கள் ஓட்டை அதிகமாக வசப்படுத்தி வைத்திருப்பது தான் என்று காங்கிரஸ் மேலிட தலைவர்கள் கண்டு பிடித்து தான் இந்த புதிய பார்முலாவை செயல்படுத்த தொடங்கி இருக்கிறார்கள்.

    இதே போல், கிறிஸ்தவ, முஸ்லீம்கள் வாக்குகளை காங்கிரஸ் வசப்படுத்தி வைத்திருப்பதாக பா.ஜனதா கூறுகிறது. அதை மனதில் வைத்து தான் அந்த கட்சியும் வியூகம் அமைக்கிறது.

    ஆனால் மற்ற மாநிலங்களில் இந்த அரசியல் வித்தைகள் எடுபடுவது சந்தேகமே!

    இதற்கு உதாரணம் தேடி கண்ணுக்கு தெரியாத மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம். நம் கண் முன்னால் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் தேர்தல் முடிவே சாட்சி.

    மதசார்பற்ற அணி, சிறுபான்மையினருக்காக குரல் கொடுப்பவர்கள் என்ற அடையாளத்தோடு அணி திரண்ட கட்சிக்கு சிறுபான்மையினர் ஓட்டு மொத்தமாக வாக்களிக்கவும் இல்லை. இந்துக்கள் ஆதரவு கட்சி என்று சொல்லப்படும். பா.ஜனதாவுக்கு இந்துக்கள் எல்லோரும் வாக்களிக்கவும் இல்லை. இதை கண் கூடாகவே பார்த்து விட்டோம்.

    அப்படி இருந்தும் மதங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் மக்களை திரட்ட அரசியல் கட்சிகள் எல்லாம் வரிந்து கட்டுகின்றன. இது அவர்களுக்கு பலன் கொடுக்கலாம். ஆனால் நாட்டுக்கு ஆபத்தை தான் தேடித்தரும்.

    கோபமே அறியாத, முட்டத் தெரியாத காளைக் கன்றுகளை ஜல்லிக்கட்டுக்கு தயார்படுத்துவதற்காக வண்ண துணிகளை காட்டியும், குடையை விரித்து பயமுறுத்தியும் மணலை குவித்து போட்டு கொம்புகளால் கிளற விட்டும் பல ஜாலங்களை செய்து எதுவும் தெரியாத அந்த கன்றுக்கு அதனுள் மறைந்து கிடக்கும் கோப, வீர உணர்வுகளை தட்டி எழுப்புவார்கள்.

    அதே போன்றதொரு பாணியைத் தான் அரசியல் கட்சிகளும் கையாளுகின்றன. இப்படி சீண்டி விடுவதும், சிண்டு முடிவதும் நல்லதல்ல.

    Next Story
    ×