search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பசிக்கு தர்பூசணி பறித்து சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் - தே.மு.தி.க. பிரமுகர் கைது
    X

    பசிக்கு தர்பூசணி பறித்து சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் - தே.மு.தி.க. பிரமுகர் கைது

    தாராபுரம் பகுதியில் பசிக்கு தோட்டத்தில் இருந்த தர்பூசணி பழத்தை பறித்து சாப்பிட்டதால் பள்ளி மாணவர்களை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய தே.மு.தி.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.
    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ளது கருங்காளிவலசு. இந்த கிராமத்தை சேர்ந்த 3 பள்ளி மாணவர்கள் நேற்று அங்குள்ள நல்லதங்காள் நீரோடையில் குளிக்க சென்றனர்.

    மாலை வெகுநேரமாகியும் மாணவர்கள் வீடு திரும்பாததை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். கிராமம் முழுவதும் தேடினர். பின்னர் டி.குமாரபாளையம் நல்லதங்காள் நீரோடைக்கு சென்று பார்த்தபோது கரையோரம் உள்ள ராமசாமி என்பவரது தோட்டத்தில் 3 மாணவர்களும் கட்டி வைக்கப்பட்டு மயங்கிய நிலையில் இருந்தனர்.

    சிறுவர்களை மீட்ட பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    ஆற்றில் நீந்திய பின்னர் அதிகமாக பசித்தது. வீடு திரும்பும்போது தோட்ட வேலியில் தர்பூசணி காய்த்திருந்தது. பசியும், தாகமும் அதிகமாக இருந்ததால் அதனை பறித்து சாப்பிட்டோம்.

    அப்போது தோட்ட உரிமையாளர் ராமசாமி (வயது 50) மற்றும் தோட்டத்தில் வேலை செய்த 2 பேர் எங்களை மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர். 6 மணி நேரம் மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

    தண்ணீர் தாகமாக இருக்கிறது என்று கெஞ்சியபோது கூட தண்ணீர் தரவில்லை என்று கதறி அழுதவாறு கூறினர்.

    இதனை கேட்ட பெற்றோர் மற்றும் பொதுமக்கள் தோட்ட உரிமையாளரை தேடினர். அப்போது அவர் தப்பி ஓடி விட்டார். தப்பி ஓடிய ராமசாமி என்ற சின்னப்பன் தே.மு.தி.க. பேரூராட்சி செயலாளராக உள்ளார்.

    பின்னர் 3 மாணவர்களையும் ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மாணவர்களை கொடூரமாக தாக்கிய தோட்ட உரிமையாளர் உள்பட 3 பேரை உடனே கைது செய்ய வேண்டும் என்று தாராபுரம் டி.எஸ்.பி. அலுவலகத்தை 150-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.

    பொதுமக்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்புலிகள் அமைப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டு மாணவர்கள் மீது தாக்கியவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    சம்பவம் நடந்த பகுதி மூலனூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் அங்கு புகார் செய்யுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து மூலனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் தோட்ட உரிமையாளர் ராமசாமி என்ற சின்னப்பனை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×