search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இருநாள் பயணமாக தமிழகம் வந்த ஜனாதிபதிக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு
    X

    இருநாள் பயணமாக தமிழகம் வந்த ஜனாதிபதிக்கு சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு

    இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று முதன்முறை தமிழகம் வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு சென்னை விமான நிலையத்தில் முப்படையினர் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    சென்னை:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் இருந்து இன்று காலை தமிழகம் வந்தார். தனிவிமானம் மூலம் மதுரை வந்து சேர்ந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் சென்றார். ராமநாத சுவாமி ஆலயத்தில் வழிபாடு செய்த பின்னர், முன்னாள் ஜனாதிபதி அமரர் அப்துல் கலாம் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய அவர் அங்கிருந்து மதுரை திரும்பி இன்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தார்.

    ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் இன்று முதன்முறையாக தமிழகம் வந்த ராம்நாத் கோவிந்துக்கு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சிவப்பு கம்பளம் விரித்து முப்படையினர் அணிவகுப்புடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதல் மந்திரி எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல் மந்திரி ஓ.பன்னீர் செல்வம், பாராளுமன்ற மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை, தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பி.தனபால், முப்படைகளை சேர்ந்த உயரதிகாரிகள் மற்றும் அரசு உயரதிகாரிகள் ஜனாதிபதிக்கு மலர் செண்டுகளை அளித்தும், சால்வைகளை அணிவித்தும் அன்புடன் வரவேற்றனர்.

    அங்கிருந்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி சற்றுநேர ஓய்வுக்கு பின்னர் இந்திய பொறியாளர்கள் சங்க பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். இன்றிரவு கவர்னர் மாளிகையில் தங்கி இருக்கும் அவர் நாளை காலை ஐதராபாத் நகருக்கு புறப்பட்டு செல்கிறார்.
    Next Story
    ×