search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.ஜ.க நெருக்கடியால் ஊதிப்பெரிதான 2 ஜி பலூன்: காங். செய்தி தொடர்பாளர் கோபண்ணா விளக்கம்
    X

    பா.ஜ.க நெருக்கடியால் ஊதிப்பெரிதான 2 ஜி பலூன்: காங். செய்தி தொடர்பாளர் கோபண்ணா விளக்கம்

    பா.ஜனதா நெருக்கடியால் ஊதிப்பெரிதான 2 ஜி பலூன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா கூறியுள்ளார்.

    சென்னை:

    2 ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

    2 ஜி வழக்கு தீர்ப்பு மூலம் தி.மு.க., காங்கிரஸ் மீது சுமத்தப்பட்ட பழி துடைக்கப்பட்டுள்ளன என்று அந்த கட்சியினர் கூறி உள்ளனர். ஆனால் இந்த வழக்கு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தி.மு.க. வினர் பதவி வகித்த போது தொடரப்பட்டது.

    2 ஜி வழக்கு ஜோடிக்கப்பட்டது என்றால், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போது தொடரப்பட்டது ஏன்? என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

    2 ஜி விவகாரம் குறித்து சிலர் குற்றச்சாட்டு கூறிய போது மத்திய கண்காணிப்பு ஆணையம் முறைகேடு நடந்திருந்தால் விசாரிக்கலாம் என்று கூறியது. ஆனால், சுப்பிரமணிய சாமி பெரிய ஊழல் நடந்திருப்பதாக கூறினார். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    ஆனால், அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. பின்னர் 2 பேர் பொது நல வழக்கு தொடர்ந்தனர். அதில் சுப்பிரமணியசாமியும் இணைந்து கொண்டார்.

    அப்போது மத்திய தொலை தொடர்பு மந்திரியாக இருந்த ஆ.ராசா மீது வழக்கு தொடர பிரதமர் அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்பிரமணியசாமி பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதற்கு பதில் வரவில்லை. எனவே பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டை சுப்பிர மணியசாமி அணுகினார்.

    இதையடுத்து பிரதமர் பதில் அளித்தார். இதை தொடர்ந்து சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் மத்திய மந்திரி ஆ. ராசா மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும். சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் மத்திய தலைமை தணிக்கை குழு அதிகாரி வினோத் ராய், தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அலைக்கற்றை உரிமையை ஒதுக்கியதால் அரசுக்கு சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று யூகத்தின் அடிப்படையில் ஒரு கருத்தை தெரிவித்தார்.

    ஏலம் மூலம் அலைக் கற்றைகளை ஒதுக்கி இருந்தால் இந்த தொகை அரசுக்கு கிடைத்து இருக்கும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். இது யூகத்தின் அடிப்படையிலான ஒரு கணக்கு. அதன் பிறகு 3 ஜி, 4 ஜி ஏலம் விடப்பட்டது. எந்த ஏலத்திலும் இந்த தொகை எட்டப்படவில்லை. இதைவிட பல மடங்கு குறைவாகத்தான் ஏலம் போனது.

    ஆனால் தலைமை கணக்கு அதிகாரியின் மிகைப்படுத்தப்பட்ட யூகத்தால் 2 ஜி விவகாரம் பெரிதானது. மிகப்பெரிய ஊழல் நடந்து விட்டதாக பா.ஜனதா உள்ளிட்ட எதிர்கட்சிகள் இதை பூதாகரமாக்கின.

    இதையடுத்து இந்த அறிக்கை வந்த 5 நாட்களில் ஆ. ராசா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    நாடாளுமன்ற கூட்டுக் குழுவை கூட்டி இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று பா.ஜனதா கூறியது. அதிலும் இந்த குற்றச்சாட்டு உண்மையல்ல என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் நடத்த விடாமல் பா.ஜனதா குழப்பம் விளைவித்தது. இதனால் ‘2 ஜி’ விவகாரம் மிகப்பெரிய ஊழலாக சித்தரிக்கப்பட்டது. பா.ஜனதா இதை ஊதி ஊதி பெரிய பலூன் ஆக்கியது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது. ஆ.ராசா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    ஆரம்பத்தில் இருந்தே இதில் ஊழல் நடைபெறவில்லை. அரசின் கொள்கைப்படிதான் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்று ஆ.ராசா கூறி வந்தார். 6 ஆண்டுகளுக்கு மேலாக சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த வழக்கு நடந்தது.

    நீதிபதி சைனி நேற்று அளித்த தீர்ப்பில், இது தவறாக பதிவு செய்யப்பட்ட வழக்கு. சரியான ஆதாரம் கிடைக்கும் என்று 7 வருடங்கள் காத்திருந்தேன். விடுமுறை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கோர்ட்டில் காத்து இருந்தேன். ஆனால் அரசு தரப்பு குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிவிட்டது.

    குற்றப்பத்திரிகையில் கூறப்பட்ட எதையும் நிரூபிக்க முடியாமல் அரசு மோசமான தோல்வி அடைந்திருக்கிறது. 2 ஜி ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை. அரசு தரப்பில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்கவில்லை.

    எனவே அனைவரும் விடுதலை செய்யப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். இதன் மூலம் பா.ஜனதா ஊதி பெரிதாக்கி 2 ஜி பலூன் உடைந்து விட்டது. உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிட்டது.

    பா.ஜனதா கொடுத்த நெருக்கடி காரணமாக பெரிதாக்கப்பட்ட 2 ஜி ஊழல் என்ற பொய் குற்றச்சாட்டு இப்போது இல்லை என்று ஆகி விட்டது. இதனால் தி.மு.க. மீதும், மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு மீதும் பூசப்பட்ட களங்கம் துடைக்கப்பட்டுள்ளது.

    1 லட்சத்து 75 ஆயிரம் கோடி ஊழலுக்கு பிரதமரும், மத்திய காங்கிரஸ் அரசும் துணை போய் விட்டது. ஆ. ராசா இந்த ஊழலுக்கு முழு காரணம் என்று சொல்லப்பட்டது. இதை சொல்லிதான் 2011 சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா பிரசாரம் செய்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.

    2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்ற கற்பனை குற்றச்சாட்டை பா.ஜனதா பெரிதாக பிரசாரம் செய்தது. மோடியும் இதை சொல்லி காங்கிரஸ் ஊழல் கட்சி என்றார். இதனால் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பா.ஜனதா அதிகாரத்துக்கு வந்தது.

    1999-ம் ஆண்டு பா.ஜனதா மத்தியில் ஆட்சி செய்த போது ஏற்படுத்தப்பட்ட கொள்கை முடிவின்படி முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்தான் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    2003-ல் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் இதை ஒரு விதியாக மாற்றியது. இதன்படி 55 நிறுவனங்களுக்கு உரிமை வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் தான் ராசா அலைக்கற்றைகளை 122 நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தார். இதற்கு முறைப்படி மத்திய அரசின் ஒப்புதலை பெற்றார்.

    ஆ.ராசா தொலை தொடர்பு மந்திரியாக பதவி ஏற்ற போது 30 கோடி பேர் தான் செல்போன் வைத்திருந்தார்கள். ஒரு போன் கால் ஒரு ரூபாய் என்று இருந்தது. ஆ.ராசா வந்த பிறகு மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு போன் கால் 30 காசு ஆக்கினார்.

    இதனால் 2008 மே மாதம் 30 கோடியாக இருந்த செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நவம்பர் 2010-ல் அவர் பதவி விலகும் போது 73 கோடியாக அதிகரித்தது. மக்களுக்கு அவர் நன்மை செய்ய வேண்டும் என்று நினைத்ததால் இழப்பு ஏற்பட்டதாக கூறி அவர் மீது பழி சுமத்தப்பட்டது என்று அவரே கூறி இருக்கிறார்.

    ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது தலைமை கணக்கு அதிகாரியாக இருந்த வினோத் ராய், பா.ஜனதாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவர் பா.ஜனதாவின் சதிக்கு உடன்பட்டுதான் கற்பனையில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று கூறியுள்ளார். அது ஊழலாக சித்தரிக்கப்பட்டு பா.ஜனதாவுக்கு ஓட்டுக்களாக மாற்றப்பட்டது. இதற்கு காரணமான வினோத் ராய் பதவி முடிந்த பிறகு பா.ஜனதா ஆட்சியில் ரெயில்வேதுறை ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

    பின்னர் மத்திய பா.ஜனதா அரசின் சிபாரிசின் பேரில் ஜ.நா. சபையின் தணிக்கை தலைமை அதிகாரி ஆகி இருக்கிறார். இதன் மூலம் 2 ஜி பூதத்தை கிளப்பிய பின்னணியில் பா. ஜனதாவுக்கு இவர் உடந்தையாக இருந்தது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

    கெட்டிக்காரன் புழுகு எட்டுநாள் என்பார்கள். இப்போது 7 வருடம் காத்திருந்து உண்மையை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். நீதிபதி சைனி நடுநிலையுடன் இருந்து இதை வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் - தி.மு.க. மீது சேற்றை வாரி வீசியவர்கள் தலைகுனியும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு கோபண்ணா கூறினார்.

    Next Story
    ×