search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரணம்: சசிகலா, பிரதாப் ரெட்டிக்கு விசாரணை ஆணையம் சம்மன்
    X

    ஜெயலலிதா மரணம்: சசிகலா, பிரதாப் ரெட்டிக்கு விசாரணை ஆணையம் சம்மன்

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விளக்கம் அளிக்கும்மாறு சசிகலா மற்றும் பிரதாப் ரெட்டிக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறியதைத் தொடர்ந்து தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமி‌ஷனை நியமித்தது.

    அதன்படி விசாரணையை தொடங்கிய நீதிபதி ஆறுமுகசாமி அரசு டாக்டர்கள், அவரது உறவினர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினார்.

    முதலில் தி.மு.க. மருத்துவ அணி செயலாளர் டாக்டர் சரவணன் ஆஜராகி மதுரை மேற்கு இடைத்தேர்தல் மனுவில் பதிவு செய்யப்பட்ட ஜெயலலிதா கைரேகையில் சந்தேகம் இருப்பதாக கூறி அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்தார்.

    தொடர்ந்து கைரேகையை பதிவு செய்த அரசு டாக்டர் பாலாஜி மற்றும் மருத்துவத் துறை இயக்குனர், டீன், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராமமோகன ராவ் ஆகியோர் சாட்சியம் அளித்துள்ளனர்.

    இந்த நிலையில் விசாரணை கமி‌ஷன் சார்பில் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 நாளில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறை அதிகாரிகள் மூலம் முறைப்படி சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதை ஏற்று சசிகலா சார்பில் முதலில் அவரது வக்கீல் விசாரணை கமி‌ஷனில் ஆஜராகி விளக்கம் அளிப்பார். தேவைப்பட்டால் சசிகலாவை நேரில் அழைத்தோ அல்லது வீடியோ கான்பரன்சிங் மூலமாகவோ விளக்கம் அளிக்க உத்தரவிடுவார் என்று கூறப்படுகிறது.

    இதே போல் அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் பிரதாப் ரெட்டி, அவரது மகள் பிரீத்தாரெட்டி ஆகியோருக்கும் நீதிபதி ஆறுமுகசாமி சம்மன் அனுப்பி உள்ளார்.


    ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் அவர் இறந்தது வரையிலான அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் தாக்கல் செய்யுமாறு சம்மனில் கூறப்பட்டுள்ளது. இன்னும் 10 நாளில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    அப்பல்லோ மருத்துவர்கள் ஏற்கனவே மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளனர். அதில் நீதிபதிக்கு திருப்தி இல்லாததால் அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கும், பிரீத்தா ரெட்டிக்கும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது.

    இதற்கிடையே நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமி‌ஷனின் 3 மாத பதவி காலம் வருகிற 25-ந்தேதியுடன் முடிவடைகிறது. விசாரணை முடிவடையாததால் மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி கடிதம் எழுதியுள்ளார்.

    தமிழக அரசு இன்றோ அல்லது ஓரிரு நாளிலோ விசாரணை கமி‌ஷனை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கும் என்று தெரிகிறது.

    அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டிக்கு சம்மனில் 10 நாள் கால அவகாசம் அளித்து இருப்பதன் மூலம் ஜனவரி 2-ந்தேதி மீண்டும் விசாரணை கமி‌ஷன் கூடும் என்று தெரிகிறது.

    அன்றைய தினம் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் மருத்துவ அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகிறது. இதில் சிகிச்சை பற்றிய புதிய தகவல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    ஏற்கனவே ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் சசிகலாவுக்கும், பிரதாப்  ரெட்டிக்கும் சம்மன் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    நேற்று விசாரணை கமி‌ஷனில் ஆஜரான முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவிடம் 3மணி நேரம் விசாரணை நடந்தது.


    இன்று சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் இருதய சிகிச்சை மருத்துவர் தினேஷ் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.

    ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் 4-ந்தேதி இருதய செயலிழப்பு ஏற்பட்டது. அப்போது டாக்டர் தினேஷ் சிகிச்சை அளித்தார். அதன் அடிப்படையில் அவர் இன்று ஆஜராகி நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

    ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன? நீங்கள் சிகிச்சை அளித்தபோது அவர் எந்த நிலையில் இருந்தார் என்பது பற்றி டாக்டரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

    நீதிபதியின் கேள்விகளுக்கு அவர் தகுந்த விளக்கத்துடன் பதில் அளித்தார்.
    Next Story
    ×