search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஜி.ஆர். தயவில் படித்த துரைமுருகனுக்கு அ.தி.மு.க.வை விமர்சிக்க தகுதி இல்லை: முதல்வர் பழனிசாமி
    X

    எம்.ஜி.ஆர். தயவில் படித்த துரைமுருகனுக்கு அ.தி.மு.க.வை விமர்சிக்க தகுதி இல்லை: முதல்வர் பழனிசாமி

    எம்.ஜி.ஆர். தயவில் படித்த துரைமுருகனுக்கு அ.தி.மு.க.வை விமர்சிக்க தகுதி இல்லை என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
    சென்னை:

    அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தண்டையார்பேட்டையில் திறந்த ஜீப்பில் பிரசாரம் மேற்கொண்டார். அவருடன் அமைச்சர் தங்கமணி, முன்னாள் அமைச்சர் பொன்னையன் உள்பட நிர்வாகிகளும் உடன் சென்றனர். தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    அ.தி.மு.க. குட்டிக்கரணம் போட்டாலும் ஆர்.கே.நகரில் டெபாசிட் பெறமுடியாது என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால் அ.தி.மு.க. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கிறார்.

    இதற்கு தோல்வி பயம் தான் காரணம். ஆர்.கே.நகர், எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதாவின் கோட்டை. அந்த இருபெரும் தலைவர்களின் கோட்டையை யாராலும் வெல்லமுடியாது.

    கூட்டணிக்காக தி.மு.க. கதவு திறந்திருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். நுழைவுவாயில் என்று வைகோ சொல்கிறார். இவர்கள் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள்.

    காய்க்கிற மரம் தான் கல்லடி படும் என்பதுபோல அ.தி.மு.க.வை தாக்கி பேசுகிறார்கள். அ.தி.மு.க.வை எந்தக்காலத்திலும் வெல்லமுடியாது என்பதை நிரூபிக்கும் தேர்தலாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமையவேண்டும். கூட்டணியை நம்பி தி.மு.க. போட்டியிடுகிறது. மக்களை நம்பி நாங்கள் போட்டியிடுகிறோம்.

    இங்கிருக்கும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது, அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் வெற்றிபெற்றார் என்றுதான் எண்ண தோன்றுகிறது.

    தி.மு.க. முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சருக்கு (துரைமுருகன்) வேலூர் காட்பாடியில் மிகப்பெரிய கல்லூரி இருக்கிறது. நான் முதல்- அமைச்சர். என்னிடம் அவரது பட்டியல் இருக்கிறது. எம்.ஜி.ஆர். தயவில் படித்த அவருக்கு (துரைமுருகன்), எம்.ஜி.ஆர். வளர்த்த அ.தி.மு.க.வை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. விமர்சிக்கவும் எல்லை உண்டு.

    ஆர்.கே.நகரில் மதுசூதனனை பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும். ஜெயலலிதா நினைவிடம் சிறந்த கோவில் போல கட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×