search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொலை : ராஜஸ்தான் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு
    X

    இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொலை : ராஜஸ்தான் காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு

    சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக ராஜஸ்தான் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    கொளத்தூர் நகைக்கடையின் மாடியில் துளைபோட்டு கொள்ளையடித்த ராஜஸ்தான் மாநில கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    பெரிய பாண்டியனுடன் சென்ற கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் காயத்துடன் உயிர் தப்பினார். ராஜஸ்தானில் உள்ள ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் தனிப்படை போலீசாருடன், கொள்ளையர்கள் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்த போது தான் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். அவரது துப்பாக்கியை பிடுங்கியே கொள்ளையர்கள் சுட்டதாக முதலில் கூறப்பட்டது. இதன் பின்னர் அவர் பலியானது பற்றி வேறு விதமாக தகவல் பரவியது.

    இன்ஸ்பெக்டர் முனிராஜ், கொள்ளையர்களின் பிடியில் இருந்து தப்ப முயன்றபோது அவரது துப்பாக்கி கீழே விழுந்ததாகவும், அந்த துப்பாக்கியை எடுத்தே கொள்ளையர்கள் சுட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டம், ஜெய்தரன் காவல்நிலையத்தில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியபாண்டியனுடன் சென்ற மற்றொரு இன்ஸ்பெக்டர் முனிசேகர் கொடுத்த புகாரின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    முனிசேகர் அளித்த மனுவில், கொள்ளையர்கள் தாக்கியபோது தனது துப்பாக்கி கீழே விழுந்ததாகவும், அதை பெரிய பாண்டி  எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். எனவே, முனிசேகரின் துப்பாக்கியால் கொள்ளையர்கள் சுட்டதில் பெரியபாண்டியன் இறந்திருப்பதாக தெரியவந்துள்ளது. இது வழக்கில் திருப்பத்தை  ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×