search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் சார் பதிவாளருக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை: ஈரோடு கோர்ட்டில் தீர்ப்பு
    X

    முன்னாள் சார் பதிவாளருக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனை: ஈரோடு கோர்ட்டில் தீர்ப்பு

    முன்னாள் சார் பதிவாளருக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் 8 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
    ஈரோடு:

    கோபி பாஸ்கரன் வீதியை சேர்ந்தவர் புஷ்பராஜ். இவர் கோபியில் உள்ள முதியோர் இல்லத்தின் ஆலோசகராக இருந்தார்.

    இவர் கோபி சார் பதிவாளர் அலுவலகத்தில் முதியோர் இல்லத்தின் ஆண்டறிக்கையை சமர்ப்பிக்க கொண்டு சென்றார். அப்போது அங்கு சீட்டு மற்றும் சங்கங்கள் பிரிவின் சார் பதிவாளராக தங்கவேலு பணிபுரிந்தார்.

    அவர் ஆண்டறிக்கையில் உள்ள குறைகளை மறைத்து பதிவு செய்து கொடுக்க புஷ்பராஜிடம் ரூ.500 லஞ்சம் கேட்டார். இதை கொடுக்க மனம் இல்லாத புஷ்பராஜ் இதுதொடர்பாக ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

    புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்து தங்கவேலுவை லஞ்ச பணம் பெற்ற போது 31.1.2004 அன்று கையும் களவுமாக கைது செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு ஈரோடு முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. இவர் வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. மாஜிஸ்திரேட்டு மலர்வாலண்டினா தீர்ப்பை வழங்கினார்.

    லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக தங்கவேலுக்கு 8 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் சம்பத் வாதாடினார். முன்னாள் சார்பதிவாளர் ஒருவர் அதிகபட்ச தண்டனை பெற்றது இந்த வழக்கில் தான் என்று வக்கீல் கூறினார்.

    இப்போது தண்டனை பெற்றுள்ள தங்கவேலு இதற்கு முன்பு நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் பணிபுரிந்தபோது லஞ்சம் பெற்று கைதாகி 3 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு வயது 62, அவர் பணியில் இல்லை.
    Next Story
    ×