search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிலமோசடி புகார்: கருணாநிதி மகள் செல்வி மீது வழக்கு பதிவு செய்யலாம் - சுப்ரீம் கோர்ட்டு
    X

    நிலமோசடி புகார்: கருணாநிதி மகள் செல்வி மீது வழக்கு பதிவு செய்யலாம் - சுப்ரீம் கோர்ட்டு

    நிலமோசடி புகார் தொடர்பாக கருணாநிதி மகள் செல்வி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    சென்னை:

    சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த நெடுமாறன் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கடந்த 2012ம் ஆண்டு கருணாநிதி மகள் செல்வி மீது ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    கருணாநிதி மகள் செல்வியும், அவரது மருமகன் ஜோதிமணியும், செங்கல்பட்டு அருகே தாழம்பூர் கிராமத்தில் தங்களது 2.94 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்யப்போவதாக கூறினார்கள்.

    அதற்காக ரூ.3.50கோடி வரைவோலையாகவும் ரொக்கமாகவும் அளித்தேன். அவர்கள்பத்திரம் பதிவு செய்து தராததால் பணத்தை திருப்பி கேட்டதற்கு என்னை மிரட்டினார்கள்.

    இவ்வாறு புகாரில் கூறி இருந்தார்.

    அந்த வழக்கு பூந்தமல்லி கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

    இந்நிலையில், செல்வி தரப்பில் ‘‘மனுதாரர் மிரட்டியதாக கூறிய அன்று நான் சென்னையில் இல்லை. அன்றைய தினம் காலையில் கொல்கத்தாவுக்கு சென்று விட்டு, இரவு தான் சென்னை திரும்பினேன். என் மீதான குற்றச்சாட்டுக்கும், எனக்கும் சம்பந்தமில்லை. இந்த வழக்கில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும்’’ என சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

    அந்தமனுவை விசாரித்த ஐகோர்ட்டு இந்த வழக்கில் இருந்து கருணாநிதி மகள் செல்வியை விடுவித்து ஜனவரி 12-ந்தேதி உத்தர விட்டது.


    சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மற்றும் நெடுமாறன் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

    கடந்த ஏப்ரல் 1-ந்தேதி அன்று இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு செல்விக்கு 6 வாரங்களுக்குள் விளக்கம் அனுப்பு மாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

    இந்நிலையில் இந்த மனுக்களின்மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் கெஹர் அருண்மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த ஆகஸ்டு மாதம் விசாரணைக்கு வந்தது.

    தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆஜரானார். செல்வி தரப்பில் மூத்த வக்கீல் கவு‌ஷல் யாதவ் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய அனுமதி கோரினார்.

    இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இரண்டு வாரத்துக்குள் வக்காலத் நாமா தாக்கல் செய்யவும் 4 வாரகாலத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கின் மீதான விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கை நீதிபதிகள் அருள் மிஸ்ரா, சந்தான கவுடா ஆகியோர் இன்று விசாரித்தனர். பின்னர் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்தனர். செல்வி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    Next Story
    ×