search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் நுரையீரலில் குண்டு பாய்ந்தது: பிரேத பரிசோதனையில் தகவல்கள்
    X

    இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனின் நுரையீரலில் குண்டு பாய்ந்தது: பிரேத பரிசோதனையில் தகவல்கள்

    இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டபோது குண்டு இடது பக்க நுரையீரலில் பாய்ந்ததால் உடனே அவர் உயிர் பிரிந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    கொளத்தூர் நகை கடையின் மாடியில் துளைபோட்டு கொள்ளையடித்த ராஜஸ்தான் மாநில கொள்ளையர்களை பிடிக்கச் சென்ற மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    பெரிய பாண்டியனுடன் சென்ற கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் காயத்துடன் உயிர் தப்பினார். ராஜஸ்தானில் உள்ள ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பெரிய பாண்டியன் உயிரிழந்தது பற்றி பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. பெரியபாண்டியனின் உடலை துப்பாக்கி குண்டு துளைத்ததும், அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டது. அவரது இடது பக்க நுரையீரலில் குண்டு பாய்ந்ததே இதற்கு காரணம் என்பது தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, பெரியபாண்டியனின் உடலில் கை, கால்கள் உள்ளிட்ட பகுதியில் குண்டு பாய்ந்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என்றும், நுரையீரலில் குண்டு பாய்ந்ததாலேயே அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும் வேதனைப்பட்டார்.

    இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் தனிப்படை போலீசாருடன், கொள்ளையர்கள் இருக்கும் இடத்தை சுற்றி வளைத்த போது தான் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்தார். அவரது துப்பாக்கியை பிடுங்கியே கொள்ளையர்கள் சுட்டதாக முதலில் கூறப்பட்டது. இதன் பின்னர் அவர் பலியானது பற்றி வேறு விதமாக தகவல் பரவியது.

    இன்ஸ்பெக்டர் முனிராஜ், கொள்ளையர்களின் பிடியில் இருந்து தப்ப முயன்றபோது அவரது துப்பாக்கி கீழே விழுந்ததாகவும், அந்த துப்பாக்கியை எடுத்தே கொள்ளையர்கள் சுட்டதாகவும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

    கொள்ளையர்களை பிடிக்க சென்ற இடத்தில் தீரத்தோடு செயல்பட்டு வீர மரணம் அடைந்த இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து சென்னை கொண்டு வரப்பட்டது. பின்னர் சொந்த ஊரான சங்கரன்கோவில் அருகே உள்ள சாலைப்புதூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் போலீஸ் பணியில் துணிச்சலாக செயல்படுபவர். இந்த துணிச்சல் தான் ராஜஸ்தானில் அவரது உயிரை பறித்துள்ளது. 3 நாட்களை கடந்தும் அவரது மரணம் மக்கள் மத்தியில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

    Next Story
    ×