search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிறிஸ்துமஸ் விழாவில், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
    X

    கிறிஸ்துமஸ் விழாவில், மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

    சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவுக்கு தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    சென்னை:

    கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் அனைத்து திருச்சபைகளும் கலந்துகொண்ட கிறிஸ்துமஸ் பெருவிழா சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் எஸ்.இனிகோ இருதயராஜ் வரவேற்புரையாற்றினார்.

    விழாவுக்கு தி.மு.க. செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி, ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ராட்சத கேக்கையும் வெட்டினார்.

    இதில் அகில இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் (புது டெல்லி) பஸேலியோஸ் கிளிமிஸ், காங்கிரஸ் மூத்த நிர்வாகி பீட்டர் அல்போன்ஸ், சென்னை மயிலை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் ஏ.எம்.சின்னப்பா, சென்னை பேராயம் தென்னிந்திய திருச்சபை துணைத்தலைவர் பால் தயானந்தன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோஷம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கிறிஸ்துமஸ் விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருக்கிறது. மீனவர்கள், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதைப்பற்றி கவலைப்படாமல் இந்த ஆட்சி நடக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சினையை சரி செய்ய நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்று ஆறுதல் கூறி இருக்கிறார். நிரந்தர தீர்வு காண மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.



    இதை எல்லாம் நிறைவேற்றிட மத்தியில் விரும்புகிற ஆட்சியும், மாநிலத்தில் பயன்படக்கூடிய ஆட்சியும் அமைய வேண்டும். அது விரைவில் வரப்போகிறது. அப்போது நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க துணைத் தலைவர் ப.அமலதாஸ் நன்றியுரை கூறினார். 
    Next Story
    ×