search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை வெள்ளத்தில் சிக்கும் பொதுமக்களை காப்பாற்ற அதிகாரிகள், தாசில்தார்களுக்கு வாக்கி-டாக்கி
    X

    மழை வெள்ளத்தில் சிக்கும் பொதுமக்களை காப்பாற்ற அதிகாரிகள், தாசில்தார்களுக்கு வாக்கி-டாக்கி

    இயற்கை பேரிடர்களின் போது பொதுமக்களை காப்பாற்றுவதற்காக அதிகாரிகள், தாசில்தார்களுக்கு வாக்கி-டாக்கி கருவிகளை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இயற்கை பேரிடர் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    இயற்கை பேரிடர்களின் போது பொதுமக்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை காக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர், கோட்டாட்சியர்கள், உதவி இயக்குனர்(பஞ்சாயத்து) மற்றும் மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் வட்டாட்சியர்கள் ஆகியோருக்கு வாக்கி-டாக்கி கருவிகளை கலெக்டர் நடராஜன் வழங்கினார். அவர் பேசியதாவது:-

    “வடகிழக்கு பருவமழை காலத்தினையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற பேரிடர் சூழ்நிலைகள் ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு நாம் அனைவரும் விழிப்புடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பொறுத்தவரையில், மாவட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற பேரிடரினால் பாதிக்கப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ள பகுதிகளாக 38 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான முறையில் தங்க வைப்பதற்கு அத்தியாவசிய வசதிகளுடன் கூடிய 38 புயல் காப்பக மையங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

    இதுதவிர மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 23 பல்நோக்கு புயல் காப்பக மையங்கள், 91 தனியார் திருமண மண்டபங்கள் மற்றும் 37 பள்ளி கட்டிடங்கள் தேர்வு செய்யப்பட்டு பொது மக்களை பாதுகாப்பான முறையில் தங்க வைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

    வடகிழக்குப் பருவ மழை காலங்களின் போது எதிர்கொள்ள நேரிடும் மழை வெள்ளம் மற்றும் இயற்கை பேரிடர்களின் போது பொதுமக்கள் மற்றும் அவர்களின் உடைமைகளை காக்கும் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு மற்றும் கண்காணிப்பு குழுக்களின் முக்கிய அலுவலர்களுக்கு வாக்கி- டாக்கி வழங்க முடிவு செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குனர், கோட்டாட்சியர்கள், உதவி இயக்குனர் (பஞ்சாயத்து) மற்றும் மாவட்டத்தில் உள்ள 8 வருவாய் வட்டாட்சியர்கள் ஆகியோருக்கு வாக்கி- டாக்கி கருவிகள் வழங்கப்படுகின்றன.

    இந்த தகவல் தொடர்பு சாதனத்தினை திறம்படப் பயன்படுத்தி பேரிடர் காலங்களில் பொதுமக்களை காத்திட பேரிடர் கண்காணிப்பு குழுவினர் ஒருவருக்கொருவர் உடனுக்குடன் தொடர்பு கொண்டு போர்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன், வருவாய் கோட்டாட்சியர் பேபி, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×