search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் மீண்டும் பரவுகிறது: டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலி
    X

    புதுவையில் மீண்டும் பரவுகிறது: டெங்கு காய்ச்சலுக்கு 2 பேர் பலி

    புதுவையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
    வில்லியனூர்:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகம் மற்றும் புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவியது. இதில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பலர் பலியானார்கள். புதுவையில் டெங்கு காய்ச்சலுக்கு 5-க்கும் மேற்பட்டோர் இறந்து போனார்கள்.

    இந்த நிலையில் புதுவையில் மீண்டும் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. இதில் 2 பேர் பலியாகி உள்ளனர். அவர்கள் பற்றிய விவரம் வருமாறு:-

    வில்லியனூர் அருகே கோர்க்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுகுணராஜ் (வயது 35). இவர் அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 11-ந் தேதி இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்ற இவர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது சுகுணராஜுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    இதுபோல் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முனுசாமி (59) என்பவரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சுகுணராஜ், முனுசாமி ஆகிய இருவரும் இன்று அதிகாலை இறந்து போனார்கள்.

    டெங்கு காய்ச்சலுக்கு பலியான சுகுணராஜுக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    அது போல் முனுசாமிக்கும் ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு ஒரே கிராமத்தில் 2 பேர் பலியானதால் கோர்க்காடு கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் பரவுவதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.
    Next Story
    ×