search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் சென்னை வந்தது: முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி
    X

    காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் சென்னை வந்தது: முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

    ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் உடல் சென்னை வந்தது. அவரது உடலுக்கு முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி செலுத்தினர்.
    சென்னை:

    ராஜஸ்தானில் பதுங்கி இருந்த கொள்ளையர்களை பிடிக்க சென்ற சென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் நேற்று கொள்ளை கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

    ராஜஸ்தான் பாலி மாவட்டத்தில் உள்ள ஜெய்புத்ரன் நகர் அருகே இந்த கொடூர சம்பவம் நடந்தது. மார்பில் குண்டு பாய்ந்ததும் அவர் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

    அவரை காப்பாற்ற அவருடன் சென்றிருந்த போலீசார் போராடினார்கள். உயிருக்கு போராடிய இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனை ஜெய்புத்ரன் தாலுகா அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர்.

    நேற்று அவரது உடல் அந்த மருத்துவமனையிலேயே பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு ஜெய்ப்பூர் கொண்டு வரப்பட்டது.

    இன்று காலை 8.20 மணிக்கு அவரது உடல் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இருந்து விமானத்தில் புறப்பட்டது. மதியம் 12.20 மணிக்கு அவரது உடல் சென்னை வந்து சேர்ந்தது.

    விமான நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் உடலுக்கு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன்மார்டி, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமி‌ஷனர்கள் சாரங்கன், ஜெயராம், சே‌ஷசாயி உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.


    இதற்காக சென்னை விமான நிலையத்தில் 5-வது வாசல் அருகில் சிறிய மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வீரவணக்கம் என குறிப்பிடப்பட்டு இருந்தது. அதன் அருகில் 21 துப்பாக்கிகளை கையில் ஏந்தியபடி 21 போலீசார் அணிவகுத்து மரியாதை செலுத்தினர்.

    வீர மரணம் அடைந்த இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று போலீஸ் உயர் அதிகாரிகள் உள்பட காவல் துறையில் உள்ள அனைவரும் கையில் கருப்பு பேட்ஜ் கட்டி இருந்தனர்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது துக்கத்தை வெளிப்படுத்தினார்கள்.


    சென்னையில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் மதுரைக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே உள்ள சாலைப்புதூருக்கு உடல் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது பூர்வீக வீட்டில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் இறுதி அஞ்சலி செலுத்துகிறார்கள்.

    இதன்பிறகு அவரது உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

    இதற்காக இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியனின் மனைவி பானுரேகா மற்றும் 2 மகன்கள் நேற்றிரவே சாலைப்புதூர் கிராமத்திற்கு சென்று விட்டனர்.
    Next Story
    ×