search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கதறி அழுததை படத்தில் காணலாம்.
    X
    மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கதறி அழுததை படத்தில் காணலாம்.

    விருப்ப ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மீண்டும் பணிக்கு வர வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம்

    விருத்தாசலம் அருகே விருப்ப ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை மீண்டும் பணிக்கு வர வலியுறுத்தி மாணவ- மாணவிகள் கதறி அழுது சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கோ.ஆதனூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக தமிழ்செல்வி பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சகஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் தலைமை ஆசிரியை தமிழ்செல்வி சாதியை சொல்லி திட்டுவதாக புகார் கூறினர்.

    இதுபற்றி தகவல் அறிந்த தமிழ்செல்வி உயர்அதிகாரிகளுக்கு தனது விருப்ப ஓய்வு கடிதத்தை நேற்று கொடுத்தார். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு மாணவ-மாணவிகள் வந்தனர்.

    ஆனால் பள்ளிக்கு தலைமை ஆசிரியை வெகு நேரமாகியும் வராததால் மாணவ-மாணவிகள் கவலை அடைந்தனர். அப்போது அங்கு வந்த ஆசிரியர்கள் மாணவ- மாணவிகளிடம் தலைமை ஆசிரியை வரமாட்டார்கள் என்று கூறினர்.

    இதைஅறிந்ததும் மாணவ-மாணவிகள் கண்ணீர் வடித்தனர். பின்னர் அவர்கள் விருத்தாசலம்- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கோ-ஆதனூர் பஸ் நிறுத்தத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் எங்களுக்கு தலைமை ஆசிரியையாக தமிழ்செல்விதான் வரவேண்டும். வேறு ஆசிரியர் வரவேண்டாம். அவர் வந்தால் தான் பள்ளிக்கு செல்வோம். அதுவரை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

    சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகள் புத்தகத்தை எடுத்து படிக்கும் காட்சி.

    போராட்டத்தில் ஈடுபட்ட சில மாணவிகள் கண்ணீர் வடித்து கதறி அழுதனர். சில மாணவிகள் புத்தகங்களை எடுத்துக்கொண்டு படித்து கொண்டு இருந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் மற்றும் தாசில்தார் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது மாணவிகள் அழுதுகொண்டே எங்களுக்கு தமிழ்செல்வி ஆசிரியை தான் வரவேண்டும் என்று கோ‌ஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்துவது குறித்த தகவல் தலைமை ஆசிரியை தமிழ்செல்விக்கு தெரியவந்தது. அவர் உடனே அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அப்போது அவர் குழந்தைகளே நீங்கள் பள்ளிக்கு சென்று ஒழுங்காக படிக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். அவரது அறிவுரையை ஏற்று மாணவ-மாணவிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு 10.30 மணிக்கு பள்ளி வகுப்பறைக்கு சென்றனர்.
    Next Story
    ×