search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கள்ளப்பெரம்பூர் ஏரியில் குவியும் அரியவகை பறவைகள்: சுற்றுலா தலமாக அறிவிக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    கள்ளப்பெரம்பூர் ஏரியில் குவியும் அரியவகை பறவைகள்: சுற்றுலா தலமாக அறிவிக்க பொதுமக்கள் கோரிக்கை

    கள்ளப்பெரம்பூர் ஏரியில் அரியவகை பறவைகள் வர தொடங்கி உள்ளதால் அவற்றை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்திலேயே மிகப் பெரிய ஏரியாக திகழ்வது கள்ளப்பெரம்பூர் ஏரி ஆகும். இந்த ஏரி 650 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கள்ளப் பெரம்பூரை சுற்றியுள்ள 7 கிராமங்களுக்கு இந்த ஏரி பாசன வசதியை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் இந்த ஏரியினால் பயன்பெற்று வந்தன.

    கடந்த 5 ஆண்டுக்கு மேலாக தஞ்சை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவியது. பொதுமக்கள் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் திண்டாடினர். விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் நிலங்கள் எல்லாம் தரிசாக மாறியது. குளங்கள், ஏரிகள் வறண்டன.

    இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பெய்தது. இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். நீரின்றி இருந்த குளங்கள், ஏரிகள் நிரம்பின.

    பருவ மழை காரணமாக கள்ளப்பெரம்பூர் ஏரி நிரம்பியுள்ளது. ஆனால் இந்த ஏரியில் சீமை கருவேல மரங்கள், ஆகாய தாமரைகள் மற்றும் வேறு சில காட்டு செடிகள் அதிகம் காணப்படுகின்றன. தண்ணீர் அதிகமாக உள்ளதால் பல்வேறு இன அரியவகை பறவைகள் வர தொடங்கியுள்ளன. இதனால் ஏரியை பார்வையிட ஏராளமானோர் வருகின்றனர்.

    இங்கு உள்ள தண்ணீருக்கு ஏற்ப ஆண்டுதோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து செல்கின்றன. அக்டோபர் முதல் மார்ச் வரை இதற்கான சீசன் காலமாகும். வெளிநாட்டு பறவையான பூநாரை, கடல்காகம் மற்றும் உள்நாட்டு பறவையான கூழைகிடா, வெள்ளை கொக்கு, செங்கால் நாரை போன்ற பல விதமான பறவைகள் அதிக அளவில் வருகின்றன. இங்கு ஏரியில் மீன்கள் அதிகம் உள்ளதால் அதை சாப்பிட்டு, கூடுகள் கட்டி தங்கள் இனத்தை பெருக்கி கொள்கின்றன.

    மேலும் வெகு தொலைவில் ஏரியின் மையப்பகுதியில் மரங்கள் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அரிய வகை பறவைகளை பார்க்க முடியாத அளவில் உள்ளது. எனவே இந்த ஏரியை தூர்வாரி மேம்படுத்தி பறவைகள் சரணாலயமாக அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தற்போது தஞ்சை பெரிய கோவில், அரண்மனை, சிவகங்கை பூங்கா, நவகிரக கோவில்கள் போன்றவற்றை காண்பதற்கு வெளிநாட்டு பயணிகள் அதிக அளவில் தஞ்சைக்கு வருகின்றனர். கள்ளப்பெரம்பூர் ஏரியை வரும் காலங்களில் சுற்றுலாதலமாக அமைத்தால் இங்கு வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகமாகும். சுற்றுலா பயணிகள் மற்றும் தஞ்சை மாவட்ட பொதுமக்கள் குறிப்பாக பள்ளி குழந்தைகள் அதிக அளவில் பயன் பெறுவார்கள். பறவைகள் சரணாலயம் உள்ள மாவட்டங்களில் தஞ்சை மாவட்டமும் இடம் பெறும். இதனால் இந்த ஏரியை தூர்வாரி சுற்றுலாதலமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×