search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை அருகே யானை தாக்கி மூதாட்டி பலி
    X

    கோவை அருகே யானை தாக்கி மூதாட்டி பலி

    கோவை அருகே இன்று காலை யானை தாக்கி படுகாயம் அடைந்த மூதாட்டி ராமாத்தாள் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி வனப்பகுதியில் இருந்து நேற்று இரவு இடிகரை பகுதிக்கு 3 காட்டு யானைகள் வந்தது. யானையை பார்த்த பொதுமக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வனத்துறையினர் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் யானைகளை பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் காட்டுக்குள் செல்லாமல் செல்வபுரம், பெரிய நாயக்கன் பாளையம், குப்பிச்சிபாளையம், ஜோதிபுரம், வீரபாண்டி பிரிவு, கூடலூர் கவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளில் சுற்றி வந்தது.

    இன்று காலை 6 மணியளவில் பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள சாமி செட்டிப்பாளையம் பகுதிக்கு வந்த யானைகள் அங்கு நின்றுகொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த பழனியப்பன் என்பவரது மனைவி ராமாத்தாள் (வயது 80) என்பவரை தாக்கி தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த பொதுமக்கள் யானைகள் அங்கு இருந்து சென்றதும் ராமாத்தாளை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராமாத்தாளை தாக்கிய பின்னர் யானைகள் கஸ்தூரி பாளையத்தை சேர்ந்த துளசியம்மாள் (70) என்பவரையும் தாக்கி தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவரையும் பொதுமக்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் யானைகள் ஜோதிபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியின் கேட்டை உடைத்து உள்ளே சென்று அங்கு முகாமிட்டுள்ளது. தொடர்ந்து வனத்துறையினர் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கோவை அரசு ஆஸ்பத்திரியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த ராமாத்தாள், துளசியம்மாள் ஆகியோருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ராமாத்தாள் பரிதாபமாக இறந்தார்.

    Next Story
    ×