search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழு வருகை: பொன். ராதாகிருஷ்ணன்
    X

    குமரி மாவட்டத்தில் புயல் சேதங்களை பார்வையிட மத்திய குழு வருகை: பொன். ராதாகிருஷ்ணன்

    ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட பகுதிகளை பார்வையிட மத்திய குழு வருவதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக குமரி மாவட்டம் வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை, மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்பின்போது தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, விஜய குமார் எம்.பி., கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் ஆகியோர் உடன் இருந்தனர்.

    பின்னர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளதற்கு நன்றி கூறிக்கொள்கிறேன். உறவுகளை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எந்த வகையில் ஆறுதல் கூறினாலும், அது ஈடாகாது. இருப்பினும் முதல்வரின் இந்த அறிவிப்பு சற்று ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.

    இதேபோல் ஒக்கி புயலால் மரம் முறிந்து விழுந்தும், மின்சாரம் தாக்கியும், வீடு இடிந்தும், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும் இறந்து போன அனைவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.20 லட்சம் வழங்க வேண்டும்.


    ரப்பர், தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசையை நான் சந்தித்தபோது என்னிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவை, முதல்-அமைச்சரின் பரிந்துரைக்கு கொடுத்துள்ளேன். புயல் பாதித்த எல்லா இடங்களுக்கும் முதல்- அமைச்சர் சென்று இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இருப்பினும் முதற் கட்ட ஆய்வாக இப்போது 2 இடங்களுக்கு மட்டும் சென்று இருக்கிறார். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, நிவாரணம் வேண்டும் என்பது தான் இப்போது நம்மிடம் உள்ள மிகப்பெரிய கோரிக்கை ஆகும். அதை நிறைவேற்றும் வகையில் அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டு உள்ளார். மாநில அரசு அறிக்கை அளித்த பின்னர், மத்திய குழு ஆய்வுக்கு வரும்.

    காணாமல் போன மீன்வர்களை தேடும் பணி தொடர்கிறது. மத்திய அரசின் மிகப்பெரிய கப்பல் ஒன்று 3-வது நாளாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. சின்னத்துறை மற்றும் தூத்தூரை சேர்ந்த மீனவர்களும் இந்த கப்பலில் உள்ளனர். அவர்கள் விருப்பத்தின்படியே தேடுதல் வேட்டை நடக்கிறது. லட்சத்தீவின் வடகிழக்கு பகுதியில் விமானம் மூலம் தேடுதல் வேட்டை நடக்கிறது.

    வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சமையல் வேலைக்காக மீனவர்களுடன் படகில் சென்றுள்ளனர். இதுபற்றிய விவரம் தெரிவிக்கப்பட்டு அவர்களையும் கண்டுபிடிக்கும் பணிகள் நடக்கின்றன. மத்திய ராணுவ அமைச்சருடன் தேடுதல் வேட்டை தொடர்பாக குறைந்தபட்சம் 10 தடவை பேசி வருகிறேன். அவரும் தொடர்ந்து இது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறார். ஒக்கி புயலை அரசியலாக்க வேண்டாம். வெளி மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் ஊடுருவி, பிரச்சனையை திசை திருப்ப முயல்கிறார்கள். சமீபத்தில் கூட கொல்லங்கோட்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×