search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 22-ந்தேதி வேலைநிறுத்தம்
    X

    என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 22-ந்தேதி வேலைநிறுத்தம்

    பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி 22-ந்தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும் என என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.
    நெய்வேலி:

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி பணி நிரந்தரம், மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச சம்பளம் மற்றும் பஞ்சப்படி, சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பின்படி சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் இன்கோசர்வ் மற்றும் ஹவுசிங்கோஸ் ஒப்பந்த தொழிலாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இது தொடர்பாக ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இது தோல்வியில் முடிவடைந்தது.

    இந்த நிலையில் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை விளக்க பேரணி நெய்வேலியில் நேற்று நடைபெற்றது.

    பேரணியை தொ.மு.ச. நிரந்தர தொழிலாளர் சங்க தலைவர் வீர ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். நெய்வேலி புதுக்குப்பம் ரவுண்டானாவில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள அண்ணாதிடலை சென்றடைந்தது.

    பின்னர் அங்கு கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. பொதுக்கூட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. ஒப்பந்த தொழிலாளர் சங்க தலைவர் மாதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் பழனிவேல், பாட்டாளி ஒப்பந்த தொழிலாளர் சங்க செயலாளர் முருகவேல், தொழிலாளர் வாழ்வுரிமை சங்க செயலாளர் திருநாவுக்கரசு, எல்.எல்.எப். சங்க செயலாளர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சி.ஐ.டி.யூ. மாநில துணை செயலாளர் குமார், என்.எல்.சி. சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் ஜெயராமன், அண்ணா தொழிலாள் ஊழியர் சங்க செயலாளர் உதயகுமார், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட தலைவர் முருகன் ஆகியோர் பேசினர்.

    பின்னர் சி.ஐ.டி.யூ. ஒப்பந்த தொழிலாளர் சங்க அலுவலக செயலாளர் அமிர்தலிங்கம் கூறியதாவது:-

    வருகிற 21-ந் தேதிக்குள் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கைகளை என்.எல்.சி. நிர்வாகம் நிறைவேற்றி தர வேண்டும். இல்லை என்றால் 22-ந் தேதி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் ஒன்று திரட்டி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும். வருகிற 30-ந் தேதிக்குள் கோரிக்கைகளை நிர்வாகம் நிறைவேற்றித்தர தவறினால் ஜனவரி முதல்வாரத்தில் இருந்து கோரிக்கைளை நிறைவேற்றும் வரை தொடர்போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க தலைவர் வேல்முருகன், அலுவலக செயலாளர் குப்புசாமி, எல்.எல்.எப். தொழிற்சங்க மாநில செயலாளர் மண்.திருநாவுக்கரசு, ஒப்பந்த தொழிலாளர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ஹென்றி, ரெங்கராமாநுஜம், குப்புசாமி, காமராஜ், அய்யப்பன், பாலசுப்பிரமணியன், சிவலிங்கம் உள்பட நிர்வாகிகள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் தொ.மு.ச. ஒப்பந்த தொழிலாளர் சங்க பொருளாளர் ஸ்டாலின் நன்றி கூறினார்.
    Next Story
    ×