search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி சேமிப்புக்கும் சிக்கல் - மக்கள் மடியிலும் கை வைக்கும் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சாடல்
    X

    வங்கி சேமிப்புக்கும் சிக்கல் - மக்கள் மடியிலும் கை வைக்கும் மோடி: பீட்டர் அல்போன்ஸ் சாடல்

    மக்களின் எல்லா உரிமைகளையும் பறித்துவிட்டு இப்போது மடியிலும் கை வைக்க மோடி துணிந்துவிட்டார் என்று வங்கி சேமிப்பில் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    வங்கி சேமிப்பிலும் மத்திய அரசு கை வைக்க எடுத்துள்ள முடிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

    பா.ஜனதா அரசு கொண்டு வர உள்ள இந்த திட்டம் பற்றி காங்கிரஸ் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது:-

    பணமதிப்பு நீக்கத்தின் மூலம் வங்கிகளில் மட்டுமே பணத்தை சேமிக்க முடியும். வைக்க முடியும் என்ற நிலையை மோடி உருவாக்கினார். எல்லா பணமும் வங்கிக்கு வரவேண்டும் என்பது அவர்கள் திட்டம். அதன்படி பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்துவிட்டது.

    வேறு எங்கும் பணத்தை வைக்கவும் முடியாது. சேமிக்கவும் முடியாது. எனவே பெருவாரியான மக்கள் வங்கிகளில் பணத்தை சேமிப்பு கணக்காகவோ, டெபாசிட்டாகத்தான் வைத்துள்ளார்கள்.

    வங்கிகளில் டெபாசிட் செய்யும் பணத்துக்கு அரசு குறிப்பிட்ட பிரீமியத்தை பெற்றுக்கொண்டு வாடிக்கையாளர்களின் பணத்துக்கு உத்தரவாதம் கொடுத்து வந்தது.

    இந்த முறையை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி வங்கி திவாலாகும் நிலை ஏற்பட்டால் பணத்துக்கும் உத்தரவாதம் கிடையாது. உதாரணமாக ரூ.10 ஆயிரம் டெபாசிட் செய்திருந்தால் ரூ.2 ஆயிரமோ அல்லது 3 ஆயிரமோ மட்டுமே திரும்ப கிடைக்கும் சூழ்நிலை உருவாகும்.



    வங்கி டெபாசிட் வருமானத்தை கொண்டு தான் பலரது வாழ்க்கையே நடக்கிறது. முதியோர்கள் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருக்கும் பணத்தில் கிடைக்கும் வட்டியை வைத்துதான் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

    பல அறக்கட்டளைகள் வங்கி சேமிப்பில் இருந்துதான் பல நல்ல காரியங்களை செய்கின்றன. மோடியின் திட்டத்தால் யாரும் எதுவும் செய்யமுடியாது. சம்பாதித்து அரசுக்கு கொடுக்க வேண்டும். செலவுக்கு ஏதோ சில்லரையை கேட்டு வாங்க வேண்டும் என்ற அடிமை வாழ்வுக்கு அழைத்து செல்கிறார்கள்.

    தொழில் செய்ய வரி, ஜி.எஸ்.டி. வரி என்று எதற்கெடுத்தாலும் வரியையும் விதித்து கஷ்டப்பட்டு சேமிக்கும் பணத்துக்கும் உத்தரவாதம் இல்லையென்றால் என்ன செய்வது?

    மக்களுக்கு இடைஞ்சல் கொடுப்பதற்காகவே ஒரு அரசாங்கம். பிரச்சினைகளை திசை திருப்பி எப்போதும் மக்களை அச்சத்திலும், பதட்டத்திலும் வைத்திருப்பதுதான் பா.ஜனதாவின் கலை.

    மக்களின் எல்லா உரிமைகளையும் பறித்துவிட்டு இப்போது மடியிலும் கை வைக்க துணிந்துவிட்டார் மோடி. இந்த அரசு நீடிப்பது நாட்டுக்கு கேடு.

    மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு மசோதா வரும்போது எதிர்க்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×