search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கால்பந்து ஆட்டத்தில் சுனாமி வீராங்கனைகள்
    X
    கால்பந்து ஆட்டத்தில் சுனாமி வீராங்கனைகள்

    விளையாட்டு, போலீஸ் துறையில் ‘சுனாமி’ மாணவிகள் சாதனை - தலைமை ஆசிரியரால் மறுவாழ்வு

    கடந்த 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரலையில் சிக்கி பெற்றோரை இழந்த 33 மாணவிகளை தத்தெடுத்த தலைமை ஆசிரியர், அவர்களை விளையாட்டு மற்றும் போலீஸ் துறையில் சிறந்தவர்களாக உருவாக்கி இருக்கிறார்.

    சென்னை:

    கடந்த 2004-ம் ஆண்டு தமிழக கடற்கரை பகுதியை சுனாமி பேரலைகள் தாக்கி கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

    இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியானார்கள். ஏராளமான குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதை ஆனார்கள். அவர்களுக்கு அரசும், தன்னார்வலர்களும் பல்வேறு வகையில் உதவி வருகிறார்கள்.

    கடலூர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியின் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மாரியப்பன் சுனாமியால் அனாதையாக்கப்பட்ட 33 சிறுமிகளை தத்து எடுத்து வளர்த்து வருவதுடன் அவர்களை விளையாட்டு துறையில் சிறந்த வீராங்கனைகளாகவும், போலீஸ் துறையில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் எனவும் உருவாக்கி இருக்கிறார்.

    தலைமை ஆசிரியர் மாரியப்பன் இந்தப் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராகவும் பணி புரிந்தார். இதனால் அவருக்கு விளையாட்டின் மீது அதிக ஆர்வம் இருந்தது. இதனால் தான் வளர்க்கும் சிறுமிகளையும் விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் வகையில் சிறந்து செயல்பட வைக்கிறார்.

    33 சிறுமிகளும் இந்த 13 ஆண்டுகளில் சிறந்த கால்பந்து வீராங்கனைகளாக உருவாகி இருக்கிறார்கள். அவர்களது திறமையால் தேசிய அளவிலான கால்பந்து அணியிலும் இடம் பிடித்துள்ளனர். 22 பேர் தமிழ்நாடு அணியிலும், 11 பேர் தேசிய அணியிலும் விளையாடுகிறார்கள்.

    2015-ம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் நடந்த தெற்காசிய விளையாட்டு போட்டியிலும், அதே ஆண்டில் பாகிஸ்தானில் பெ‌ஷவாவரில் நடந்த போட்டியிலும் பங்கேற்ற இந்திய அணியில் இடம் பெற்று தங்கம் வென்றனர்.

    5 மாணவிகள் சப்-இன்ஸ்பெக்டராகவும், 2 பேர் போலீசாகவும் தேர்வு பெற்றுள்ளனர்.

    மாரியப்பனுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் பெயர் செந்தில்குமார், மற்றொருவர் ஓம்.பிரகாஷ். 2 மகன்களுடன் சேர்த்து 33 மாணவிகளையும் தனது பிள்ளைகளாக எந்த பாகுபாடும் காட்டாமல் வளர்த்து வருகிறார். அனைவருமே மாரியப்பனை அப்பா என்றும், அவரது மனைவி ஆஷா லதாவை அம்மா என்றும் அழைக்கிறார்கள்.

    இதுபற்றி ஆசிரியர் மாரியப்பன் சுப்பிரமணியன் கூறுகையில், எனக்கு 2 மகன்கள் உள்ளனர். 33 மாணவிகளையும் சேர்த்து எனக்கு 35 பிள்ளைகள்- அனைவரையும் சொந்த பிள்ளைகளாக வளர்த்து வருகிறேன் என்றார்.

    மாணவிகளுக்காக தனது வீட்டின் அருகே உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் தங்க வைத்து இருக்கிறார். தனக்கு வரும் பென்சன் பணம் ரூ.35 ஆயிரம் முழுவதையும் அவர்களுக்கு செலவிடுகிறார்.

    மேலும் இரக்க மனம் படைத்த பலரும், தன்னார்வலர்களும் மாரியப்பன் சுப்பிரமணியனுக்கு பல்வேறு வகையில் உதவியும் செய்து வருகிறார்கள்.

    சுனாமியால் பாதிக்கப்பட்டதும் 33 குழந்தைகளும் முதலில் ஏழைகளுக்கான அரசு இல்லத்தில் தங்கி இருந்தனர். அவர்களுக்கு மாரியப்பன் சுப்பிரமணியன் கால்பந்து விளையாட பயிற்சி அளித்தார். பின்னர் அவர்களது திறமையை பார்த்து வீடு வாடகைக்கு பிடித்து தங்க வைத்து காப்பாற்றி வருகிறார்.

    மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிப்பதை நிறுத்திவிட்டு சுனாமி குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதில் முக்கியத்துவம் அளித்தார். விளையாட்டில் ஈடுபடுவதன் மூலம் இதில் கவனம் செலுத்தி கவலையை மறந்தனர்.

    Next Story
    ×