search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது
    X

    நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது

    3-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் இரண்டு நாள் நடத்தும் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியது.
    சென்னை:

    பி.எஸ்.என்.எல் அனைத்து தொழிற்சங்கம் மற்றும் கூட்டமைப்பு நாடு முழுவதும் இன்று முதல் வேலை நிறுத்தம் தொடங்கியது. 3-வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும். பி.எஸ்.என்.எல். கோபுரங்களை தனியாருக்கு கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடைபெறும் இந்த வேலைநிறுத்தம் நாளை வரை நடக்கிறது.

    இந்த நிலையில் வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் மட்டுமின்றி அதிகாரிகளும் கலந்து கொண்டதால் அலுவலகங்கள் திறக்கப்படவில்லை.

    தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் பேர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 8 ஆயிரம் ஊழியர்கள் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். சென்னையில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பி.எஸ்.என்.எல். அலுவலகங்கள் இன்று செயல்படவில்லை. அதிகாரிகள், ஊழியர்கள் வேலைக்கு வராததால் வாசல் கதவு பூட்டப்பட்டன. புரசைவாக்கத்தில் உள்ள தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஊழியர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊழியர்கள் ஸ்டிரைக்கால் பி.எஸ்.என்.எல். சேவை பாதிக்கப்பட்டன. வாடிக்கையாளர் சேவை மையங்கள் முழுவதும் முடப்பட்டு இருந்தன. இதனால் டெலிபோன் கட்டணம், செல்போன் கட்டணம் செலுத்த முடியவில்லை. டெலிபோன் பழுது குறித்த புகாரை சரிசெய்ய ஊழியர்கள் இல்லாததால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர்.

    இதுகுறித்து பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க கன்வீனர் எம்.கன்னியப்பன் கூறியதாவது:-

    பி.எஸ்.என்.எல். நிறுவனம் நஷ்டத்தில் இயக்கப்படுவதாக கூறி வருகிறார்கள். ஆனால் முறையான செயல்பாட்டு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. அதிகாரிகள், ஊழியர்களுக்கு 3-வது ஊதிய மாற்றம் அமல்படுத்தவில்லை. மேலும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பி.எஸ்.என்.எல். கோபுரங்களை தனியாருக்கு பிரித்து கொடுக்க திட்டமிட்டுள்ளது உள்பட 3 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடந்து வருகிறது.

    இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. எலக்ட்ரானிக் சிஸ்டத்தில் தகவல் தொடர்பு பரிமாற்றம் நடைபெறுவதால் அதில் எவ்வித சிக்கலும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஊழியர்கள் மூலம் செய்யக் கூடிய பணிகள் மட்டும் பாதிக்கும் என்றார்.
    Next Story
    ×