search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒக்கி புயலால் மாயமான மீனவர்களை கப்பல்கள் மூலம் தேடும் பணி தீவிரம்: கடலோர காவல்படை தகவல்
    X

    ஒக்கி புயலால் மாயமான மீனவர்களை கப்பல்கள் மூலம் தேடும் பணி தீவிரம்: கடலோர காவல்படை தகவல்

    ஒக்கி புயலால் மாயமான மீனவர்களை கப்பல்கள் மூலம் தேடும் பணி தீவிரமாக நடைபெற்ற வருவதாக இந்திய கடலோர காவல்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது.
    சென்னை:

    இந்திய கடலோர காவல்படை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஒக்கி புயல் வீசியதைத் தொடர்ந்து கடந்த 11-ந் தேதியன்று 23 கடலோர காவல்படை கப்பல்கள், 3 டொர்னியர் விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் ஆகியவை, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு, மினிகாய் தீவுகளில் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டன.

    கன்னியாகுமரியில் இருந்து கோவா வரை கடலோரப் பகுதியில் 930 கி.மீ. நீளத்திற்கு இந்த தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. அதுபோல விமானங்கள் மூலம் 555 கி.மீ. கடல் பகுதியில் தேடுதல் பணி நடைபெற்றுள்ளது. லட்சத் தீவு, மினிகாய் தீவு மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் சம்மார், சன்கல்ப் ஆகிய கடலோர காவல்படை கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. 10-ந் தேதியன்று கொச்சியில் இருந்து வடமேற்கு திசையில் 32 கி.மீ. தூரத்தில் ஒரு உடல், சன்கல்ப் கப்பலால் மீட்கப்பட்டது. 

    அதுபோல அலிகோடில் இருந்து வடமேற்கு திசையில் 45 கி.மீ. தூரத்தில் ஒரு உடலை அந்தக் கப்பல் மீட்டது. அதுபோல சம்மார் கப்பலும், கொச்சியில் இருந்து மேற்கு திசையில் 278 கி.மீ. தூரத்தில் 10-ந் தேதியன்று ஒரு உடலை மீட்டிருந்தது. மீட்கப்பட்ட உடல்கள், கண்காணிப்புப் படகுகளிடம் ஒப்படைக்கப்பட்டன. 11-ந் தேதியன்று தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து ஆதேஷ் கப்பல் புறப்பட்டு கன்னியாகுமரி கடலோரப் பகுதி முழுவதும் காணாமல் போன மீனவர்களைத் தேடியது. அதுபோல வைபவ் கப்பலும் 5 மீனவர்களை உடன் அழைத்துச் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×