search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்களை மீட்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்: வானதி சீனிவாசன்
    X

    மீனவர்களை மீட்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்: வானதி சீனிவாசன்

    மாயமான மீனவர்களை மீட்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியலை ஈடுபடுத்தக் கூடாது என்று வானதி சீனிவாசன் கூறினார்.
    திருச்சி:

    பா.ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் வானதி சீனிவாசன் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்று மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் விழாவையொட்டி பா.ஜனதா சார்பில் மலரஞ்சலி, புகழஞ்சலி செலுத்தியுள்ளோம். பாரதியார் ஒரு தீர்க்கதரிசி. நாட்டின் விடுதலைக்காக மட்டுமின்றி அதையும் தாண்டி நாடு எப்படி இருக்க வேண்டும் என்று தனது கவிதை மூலம் கூறியுள்ளார். கல்வி மட்டுமின்றி நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை கூட அவர் கவிதைகள் மூலம் விளக்கியுள்ளார். பெண் கல்வி முன்னேற்றத்திற்காக அடுத்த ஆண்டு ஜனவரி 22-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 22-ந்தேதி வரை ஒரு மாதம் ரத யாத்திரை நடத்தப்பட உள்ளது.

    ஒகி புயல் குறித்த முன்னறிவிப்பை மத்திய அரசின் வானிலை மையம் அறிவித்தது. புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு சென்றுள்ளார். மேலும் மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கை பணிகளையும் மேற்கொண்டு வருகிறார்.

    அவர் குமரி மாவட்டத்திற்கு வந்த போது, மீனவர்களை தேடும் பணியில் கப்பற்படையினருடன் தங்களையும் அழைத்து செல்ல வேண்டும் என்று அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கப்பற்படையினருடன் குமரி மீனவர்களையும் அனுப்பி வைத்தார். இன்றுவரை மீனவர்களுடன் சேர்ந்து கப்பற்படையினர் மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அத்தொகுதியின் பா. ஜனதா எம்.பி.யும் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் அரசு முறை பயணமாக ஈரான் சென்றிருந்தார். தற்போது அவர் தொகுதியிலேயே முகாமிட்டு பணிகளை செய்து வருகிறார். அவரிடம் கூட தூத்தூர் மீனவர்கள், கப்பற்பையினருடன் தங்களையும் அழைத்து செல்ல வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சருடன் பேசிய அவர், தூத்தூர் மீனவர்களையும் கப்பற்படையினருடன் அனுப்பி வைத்துள்ளார்.

    அவர்கள் எங்கெல்லாம் செல்லுமாறு கூறுகிறார்களோ அங்கெல்லாம் கப்பற்படையினர் சென்று தேடி வருகின்றனர். 50 நாட்டிக்கல் மைல் தூரம் மட்டுமே தேட வேண்டிய நிலையில் 200 நாட்டிக்கல் மைல் தூரம் வரை சென்று தேடியுள்ளனர். மாலத்தீவு பகுதியில் கரை ஒதுங்கியிருக்கலாம் என மீனவர்கள் கூறியதையடுத்து, அந்த நாட்டின் அரசாங்கத்திடம் அனுமதி பெற்று, தற்போது அங்கேயும் தேடும் பணி நடக்கிறது.

    மீனவர்களை தேடும் பணியில் தமிழக அரசிற்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. அவர்கள் எத்தனை மீனவர்கள் காணாமல் போயுள்ளனர் என்று சரியான தகவல்களை தெரிவித்தால் அதற்கேற்றாற்போல் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

    மாயமான மீனவர்கள் பலர் இந்தியாவின் பல இடங்களில் கரை ஒதுங்கி வருகின்றனர். அங்கு அவர்களுக்கு தேவையான வசதிகளை மத்திய அரசு செய்து கொடுத்து வருகிறது. குஜராத்தில் கரை ஒதுங்கிய மீனவர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு கன்னியாகுமரிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பார்வையிட்டு சென்ற பிறகும் அந்த மாவட்ட மக்களுக்கு திருப்தியில்லை. எனவே மூத்த அமைச்சர் ஒருவர் அங்கேயே முகாமிட்டு பணிகளை கவனிக்க வேண்டும். மீனவர்களை மீட்பதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியலை ஈடுபடுத்தக் கூடாது. முழு கவனமும் மீனவர்களை மீட்பதிலேயே இருக்க வேண்டும். குஜராத் சட்டமன்ற தேர்தலில் பா. ஜனதா கட்சி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது திருச்சி மாவட்ட பா.ஜனதா தலை வர் தங்க.ராஜைய்யன், நிர்வாகிகள் பார்த்தீபன், ஆர். வி.எஸ்.செல்வக்குமார், இல. கண்ணன், லீமா சிவக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×