search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயமான மீனவர்கள் பற்றி போலீஸ் நிலையங்களில் குவியும் புகார்கள்: 139 பேரை காணவில்லை என வழக்கு
    X

    மாயமான மீனவர்கள் பற்றி போலீஸ் நிலையங்களில் குவியும் புகார்கள்: 139 பேரை காணவில்லை என வழக்கு

    மாயமான மீனவர்கள் பற்றி கடலோர பாதுகாப்பு குழும போலீசில் ஏராளமான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுவரை 139 மீனவர்கள் காணவில்லை என வந்த புகார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் தாக்கியதில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற ஆயிரக்கணக்கான மீனவர்கள் காணாமல் போனார்கள்.

    இவர்களை கண்டுபிடிக்க கடற்படை, கடலோர காவல்படை கப்பல்கள், விமானங்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. வெளிமாநிலங்களில் கரை ஒதுங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் ஒவ்வொருவராக சொந்த ஊருக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

    இதேபோல லட்சத்தீவில் ஆளில்லாத தீவுகளில் கரை ஒதுங்கியவர்களையும் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே புயலில் சிக்கி மாயமானவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோரின் விவரங்கள் தெரியவில்லை. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    இதனால் அவர்களின் உறவினர்கள், குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையே ஆழ்கடல் பகுதியில் ஏராளமான மீனவர்களின் உடல்கள் மிதப்பதாக கரை மீண்டு வந்தவர்கள் தெரிவித்தனர். அந்த உடல்கள் தங்கள் குடும்பத்தினரின் உடல்களாக இருக்குமோ என்ற அச்சம் மீனவ மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

    அந்த உடல்களை மீட்டு வர வேண்டும் என்று மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கிடையே குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறியதாவது:-



    குமரி மாவட்டத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் ஆழ்கடலில் குறைந்தது 10 நாள் முதல் 45 நாட்கள் வரை கடலிலேயே தங்கி மீன் பிடிப்பார்கள். சில படகுகள் அதிகாலையில் கடலுக்கு சென்று இரவில் கரை திரும்பும். இன்னும் சில படகுகள் 2 நாட்கள் வரை தங்கியிருந்து மீன் பிடித்து திரும்புவார்கள். குறைந்த நாட்களில் கரை திரும்பும் மீனவர்களில் பெரும்பாலானோர் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டு உள்ளனர்.

    ஆனால் 13 வள்ளங்களில் மீன் பிடிக்கச் சென்ற 35 மீனவர்களும், 43 விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 427 மீனவர்கள் என மொத்தம் 462 பேரின் விவரங்கள் இதுவரை தெரியவில்லை. அவர்களை கண்டுபிடிக்க தேடுதல் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே மாயமான மீனவர்கள் பற்றி கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் செய்யலாம் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. இதையடுத்து குளச்சலில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீசில் மாயமான மீனவர்களின் உறவினர்கள் புகார்களை பதிவு செய்த வண்ணம் உள்ளனர். நேற்று வரை 20 வழக்குகள் பதிவாகி உள்ளது. இதில் நீரோடி, இரவிபுத்தன்துறை, கோடிமுனை, தூத்தூர், சின்னத்துறை பகுதிகளைச் சேர்ந்த 139 மீனவர்களை காணவில்லை என்றும், அவர்களை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.



    காணாமல் போனவர்களில் ஒரு சிலர் இறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புகார்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்றும் ஏராளமானோர் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையத்தில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

    புகார்கள் பதிவான பின்னே இன்னும் எத்தனை மீனவர்கள் மாயமாகி உள்ளனர் என்ற முழுவிவரம் தெரியவரும்.
    Next Story
    ×