search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நன்னிலத்தில் பேராசிரியர் ஜெயராமன், மனைவி- மகன்களுடன் இன்று கைது
    X

    நன்னிலத்தில் பேராசிரியர் ஜெயராமன், மனைவி- மகன்களுடன் இன்று கைது

    ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடி வரும் பேராசிரியர் ஜெயராமன் நன்னிலத்தில் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டார்.
    பேரளம்:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் வயல்களில் எண்ணை குழாய் பதித்து மீத்தேன், ஷேல் கியாஸ் எடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இதனால் அப்பகுதி விளைநிலங்கள் பாதிக்கப்பட்டு குடிநீர் மற்றும் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் கதிராமங்கலம், திருவாரூர் மற்றும் நன்னிலம் பகுதிகளில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணை குழாய் பதிக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது. இதில் அடிக்கடி கசிவு ஏற்பட்டு கச்சா எண்ணை வயலில் பரவி, நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டது.

    இதை கண்டித்து பல்வேறு போராட்டங்களில் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் கிராமமக்கள் ஈடுபட்டனர். இதையடுத்து ஜெயராமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயராமன் ஜாமீனில் வெளியில் வந்தார். ஆனால் அவர் தொடர்ந்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நன்னிலம் பகுதியில் தீயணைப்பு நிலையத்துக்கு பின்புறம் தென்னஞ்சார் என்ற இடத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் ஆழ்குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இதையொட்டி ஏராளமான கனரக வாகனங்கள் அங்கு அணிவகுந்து வந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதை கண்டித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் இப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்தார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் மீத்தேன் திட்ட எதிர்ப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் அப்பகுதி மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், பணிகளை தடுத்து நிறுத்தவும், நாம் தமிழர் கட்சியினர் இன்று நடத்தவிருந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்கவும் அங்கு வந்துள்ளார்.

    இதையறிந்த நன்னிலம் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அப்போது பஸ் நிலையம் பகுதிக்கு மனைவி சித்ரா மற்றும் மகன்களுடன் பேராசிரியர் ஜெயராமன் வந்தபோது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு நின்றிருந்த கிராமமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிராக போராட மக்களை தூண்டுவதாக கூறி பேராசிரியர் ஜெயராமனை மீண்டும் போலீசார் கைது செய்தனர். அப்போது உடனிருந்த அவரது மனைவி சித்ரா, மகன்கள் இளம்பரிதி, அருள் ஆகியோரையும் போலீசார் கைது செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×