search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணியில் 1800 அதிகாரிகள் நியமனம்
    X

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணியில் 1800 அதிகாரிகள் நியமனம்

    ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தலை நடத்துவதற்காக 1,800 வாக்குச்சாவடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் இறுதிப் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. நடிகர் விஷால் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது உச்சக்கட்ட திருப்பமாக அமைந்தது.

    விஷால் புகார் தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி மாற்றப்பட்டு பிரவீன்நாயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுபோன்ற அடுத்தடுத்த நடவடிக்கைகளால் தேர்தல் களம் களை கட்டத் தொடங்கியுள்ளது. மொத்தம் 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

    இந்த நிலையில் இடைத்தேர்தலில் மீண்டும் பணப் பட்டுவாடா புகார் எழுந்துள்ளது. இதனால் தேர்தல் மீண்டும் ரத்து செய்யப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி உள்ளன.

    தேர்தல் விதிமீறல்களை தடுக்க சிறப்பு பார்வையாளர்களை இந்திய தேர்தல் கமி‌ஷன் நியமித்து தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஒருசில அதிகாரிகளும், போலீசாரும் விதிமீறல்களை கண்டு கொள்வதில்லை என்று தேர்தல் கமி‌ஷனிடம் தேர்தல் பார்வையாளர்கள் புகார் அனுப்பி உள்ளனர்.

    இதனால் புகாருக்கு ஆளான அதிகாரிகள் மாற்றப்பட்டு வேறு அதிகாரிகள் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.


    இதற்கிடையே தேர்தல் ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. தேர்தலை நடத்துவதற்காக 1,800 வாக்குச்சாவடி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாநகராட்சியில் பணியாற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும், ஊழியர்களும் இதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வாக்குச்சாவடி மற்றும் ஓட்டுப்பதிவு பணிகள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    வாக்குச்சாவடி வாரியாக தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தலை நடத்தும் பணியில் 3,000 அதிகாரிகள் ஈடுபடுத்தப்படடு உள்ளனர்.

    தேர்தலை அமைதியாகவும், சுமூகமாகவும் நடத்துவதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தொகுதியில் தெருவுக்கு தெரு 300 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து தேர்தல் விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    தேர்தல் பாதுகாப்புக்கு 1500 உள்ளூர் போலீசார் தவிர 20 கம்பெனி துணை ராணுவ படையினரும் வரவழைக்கப்படுகிறார்கள். ஒரு கம்பெனியில் 100 முதல் 136 வீரர்கள் என 2,000 வீரர்கள் வருகிறார்கள்.

    2 கம்பெனியில் 272 வீரர்கள் மத்தியபிரதேச மாநிலம் போபாலில் இருந்து நேற்று இரவு சென்னை வந்தனர். அவர்கள் உடனடியாக ஆர்.கே. நகரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மீதம் உள்ள துணை ராணுவப் படையினர் அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆர்.கே.நகர் வருகிறார்கள். ஏற்கனவே வந்த துணை ராணுவப் படையினர் புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி சமூகநல கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    ஆர்.கே.நகரில் 59 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஒரு வாக்குச் சாவடிக்கு 4 மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக 256 வாக்குச் சாவடிகளிலும் மொத்தம் 1,200 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படுகிறது.

    இதில் 300 எந்திரங்கள் மூத்த தேர்தல் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளது.

    மற்ற மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களும் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு வருகிறது. ஓட்டுப்பதிவின் போது எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால் மாற்று எந்திரங்களும் கூடுதலாக தயார் நிலையில் வைக்கப்படுகிறது.

    Next Story
    ×