search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குஜராத் தேர்தல் முடிவு திருப்புமுனையை ஏற்படுத்தும்: நாராயணசாமி நம்பிக்கை
    X

    குஜராத் தேர்தல் முடிவு திருப்புமுனையை ஏற்படுத்தும்: நாராயணசாமி நம்பிக்கை

    குஜராத் தேர்தல் முடிவு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று சோனியா பிறந்தநாள் விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சித்தலைமை அலுவலகத்தில் நடந்த சோனியா பிறந்தநாள் விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    தேசிய கட்சிகளில் நீண்ட காலம் தலைவராக இருந்தவர் சோனியாகாந்திதான். அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக 19 ஆண்டு பதவி வகித்துள்ளார்.

    இந்திராகாந்தி 7 ஆண்டு, ராஜீவ்காந்தி 4 ஆண்டு, நரசிம்மராவ் 4 ஆண்டு, சீத்தாராம் கேசரி 2 ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தனர்.

    தொடர்ந்து 19 ஆண்டு பதவி வகித்தவர் சோனியா மட்டும்தான். அவர் கட்சி தலைவராக இருந்தபோது பல்வேறு சாதனைகளை செய்துள்ளார். 16 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வித்திட்டவர்.

    2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மன்மோகன்சிங் தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையவும் காரணமாக இருந்தார்.

    சீத்தாராம் கேசரி தலைவராக இருந்தபோது அரசியலை விட்டு ஒதுங்குவதாக சோனியா அறிவித்தார். இந்து தர்மப்படி தன் கணவரின் நினைவுகளோடு வாழப் போவதாக தெரிவித்திருந்தார். காங்கிரஸ் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் கேட்டுக் கொண்டதன்பேரில்தான் அரசியலுக்கு வந்தார். தனது விருப்பத்தின்பேரில் அரசியலுக்கு வரவில்லை.

    ஆனாலும் காங்கிரஸ் கட்சியை வலுவான பேரியக்கமாக மாற்றியவர் சோனியா. அவரைத்தொடர்ந்து ராகுல்காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

    பிரதமர் மோடி யாருக்கும் பயப்படுவது இல்லை. ஆனால், ராகுல்காந்தியின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறி வருகிறார்.

    சமீபத்தில் குஜராத்தில் மோடி பங்கேற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் 20 ஆயிரம் நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. அதில் 15 ஆயிரம் நாற்காலிகள் காலியாக இருந்தது. பேஸ்-புக், டுவிட்டர் சமூக வலைதளங்கள் மூலம் ஆட்சியை பிடித்தவர் மோடி.

    தற்போது சமூகவலை தளங்களிலும் மோடிக்கு கடும் எதிர்ப்பு உருவாகி உள்ளது. விரைவில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். சோனியாவும், ராகுலும் புதுவை மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள்.

    ராகுல் கட்சி தலைவராக தாக்கல் செய்த வேட்புமனுவில் 10 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அதில் 10-வது ஆளாக புதுவை முதல்-அமைச்சர் என்ற முறையில் நான்தான் கையெழுத்திட்டுள்ளேன். அந்த வாய்ப்பை சோனியாவும், ராகுலும் வழங்குகின்றனர்.

    சமீபத்தில் டெல்லி சென்றபோது மத்திய மந்திரிகளை சந்தித்தோம். ஜனவரியில் சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவது தொடர்பாக நிதின் கட்காரியிடம் பேசி உள்ளோம். அவர் புதுவை துறைமுக அபி விருத்திக்காக ரூ.300 கோடி தருவதாக கூறியுள்ளார்.

    காரைக்காலில் ஜிப்மர் வளாகம் அமைக்க ரூ.500 கோடி வழங்குவதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. சிலர் தாங்கள்தான் நியமன எம்.எல்.ஏ.க்கள் என்று கூறி வந்தனர். இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடக்கிறது.

    மாநில அரசு பரிந்துரை இல்லாமல் ஒருபோதும் நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்க முடியாது. இன்னும் சிலர் ஆட்சி மாற்ற கனவில் உள்ளனர். இந்திராநகர் தேர்தல் தொடர்பாக 7 பேர் மீது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஏ.கே.டி.ஆறுமுகம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அங்கு போட்டியிட்ட முன்னாள் முதல்- அமைச்சர் ரங்கசாமி தான் எந்த கட்சி சார்பில் போட்டியிடுகிறேன் என்பதையே வேட்புமனுவில் குறிப்பிடவில்லை.

    இந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. என்.ஆர்.காங்கிரசுக்கு 7 எம்.எல். ஏ.தான் உள்ளனர். ஆனால், ஆட்சிக்கு வர துடிக்கின்றனர். நம் கட்சியில் 15 எம்.எல்.ஏ.க்களும், கூட்டணியான தி.மு.க.வில் 2 எம்.எல்.ஏ.வும், ஒரு சுயேச்சை ஆதரவு என 18 எம்.எல்.ஏ. உள்ளோம். இதனால் அவர்களின் ஆட்சி மாற்ற கனவு பலிக்காது. கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் வாங்கிய கடனுக்கு ஜனவரியில் ரூ.170 கோடி பணம் கட்ட வேண்டியுள்ளது.

    இதேபோல புதுவை அரசுக்கு உள்ள ரூ.6 ஆயிரத்து 500 கோடிக்கு ரூ.100 கோடி வட்டி கட்ட வேண்டும். மத்திய அரசு 6-வது மற்றும் 7-வது சம்பள கமி‌ஷனில் புதுவைக்கு தர வேண்டிய நிதியை தரவில்லை.

    திட்டமில்லா செலவுக்கு ரூ.ஆயிரத்து 650 கோடி வழங்க வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் தொடர்ந்து பிரதமரையும், நிதி மந்திரியையும் சந்தித்து கேட்டு வருகிறோம். அவர்கள் கொடுப்பதாக கூறினாலும், கொடுப்பதில்லை. மோடி பிரதமரா? குஜராத்தின் முதல்- அமைச்சரா? என தெரியவில்லை.

    நாள்தோறும் பிரசாரத்திற்கு மோடி செல்கிறார். ஆனால், குஜராத்திலேயே அவரின் செல்வாக்கு சரிந்து விட்டது. குஜராத் தேர்தல் திருப்புமுனையாக அமையும். 2019-ல் ராகுல்காந்தி நாட்டின் பிரதமர் ஆவார்.

    இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
    Next Story
    ×