search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக விவசாயிகள் பிரசாரம்: பி.ஆர்.பாண்டியன்
    X

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக விவசாயிகள் பிரசாரம்: பி.ஆர்.பாண்டியன்

    அரசியல் லாப நோக்கோடு தமிழகத்தை அழிக்க நினைக்கும் பாரதிய ஜனதா கட்சி ஆர்.கே நகரில் போட்டியிடுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று பி.ஆர். பாண்டியன் கூறினார்.
    சீர்காழி:

    சீர்காழி பகுதியில் மழையினால் சேதமடைந்த நெற் பயிர்களை பார்வையிட்ட தமிழக காவிரி அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட தொடர்ந்து போராடி வருகிறோம். இந்த பகுதியில் விவசாயிகள் ஒன்றிணையாவிட்டால் விவசாயம் வரும் காலத்தில் இல்லாமல் போய்விடும். இந்த பகுதிகளில் உள்ள விளைநிலங்களை அபகரிக்க பெட்ரோலிய மண்டலமாக அறிவித்து விட்டார்கள். இதற்கு ஆதரவாக பாசன கட்டுமானங்களை கொண்டு வர தமிழக அரசு தயங்குகிறது. காவிரி பகுதிகளை மத்திய அரசு வேளாண்மண்டலமாக அறிவிக்க கோரினால், பெட்ரோலிய ரசாயன மண்டலமாக அறிவித்துதுள்ளனர். அதனை தடுத்து நிறுத்தும் வரை விவசாயிகளை திரட்டி போராடுவோம்.

    கடல் முகத்துவாரங்களில் சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இறால் பண்ணைகள் அகற்றபட வேண்டும். மத்திய அரசு இறால் பண்ணைகள் அதிபர்களுக்கு ஆதரவாக சட்டதிருத்தங்கள் கொண்டு வந்ததன் விளைவாக இறால் பண்ணைகளை அடக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழக அமைச்சர் ஒருவர் கூறி உள்ளார். அப்படி சட்டதிட்டங்கள் கொண்டு விளைநிலங்களை அபகரிக்க எண்ணினால் அந்த சட்டத்திற்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்.

    அண்டை மாநில அரசியல் லாப நோக்கோடு தமிழகத்தை அழிக்க நினைக்கும் பாரதிய ஜனதா கட்சி ஆர்.கே நகரில் போட்டியிடுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    அவர்களுக்கு எதிரான பிரசாரத்தை நாங்கள் அடுத்தவாரம் ஆர்.கே நகரில் தொடங்க உள்ளோம். இதே நிலை தொடர்ந்தால் வரும் 2019 பாராளுமன்ற தேர்தலில் விவசாயிகளை ஒன்று திரட்டி தமிழகத்தில் களம் இறங்குவோம். தமிழக அரசு மின்சார வாரியத்தில் தட்கல் முறையில் ரு.2.50லட்சம் கொடுத்தால் மின் இணைப்பு உடனடியாக அறிவித்துள்ளது. இதனால் உண்மையான விவசாயிகள் பயன்பெற போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது விவசாய சங்க நிர்வாகிகள் சிவப்பிரகாசம், விஸ்வ நாதன், பாஸ்கர், சீனுவாசன், பன்னீர்செல்வம், சுதாகர் ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×