search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆந்திராவுக்கு கொண்டு சென்றபோது கரும்பு லாரிகளை தடுத்து நிறுத்திய தமிழக அதிகாரிகள்
    X

    ஆந்திராவுக்கு கொண்டு சென்றபோது கரும்பு லாரிகளை தடுத்து நிறுத்திய தமிழக அதிகாரிகள்

    கரும்பு லாரிகளை தடுத்து நிறுத்தியது ஏன் என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் அருகே உள்ள திருவாலாங்காட்டில் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. அதே போல் தமிழக எல்லையை ஓட்டி ஆந்திராவில் உள்ள பிச்சாட்டூர், நெல்வாய், புஜ்ஜிநாயுடுபாளையம், நாயுடுபேட்டை பகுதிகளில் ஏராளமான தனியார் சர்க்கரை ஆலைகள் உள்ளன.

    தமிழக அரசு கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ. 2850 ஆக நிர்ணயித்து உள்ளது. ஆனால் ஆந்திராவில் உள்ள தனியார் கரும்பு ஆலைகள் டன்னுக்கு கரும்பு ரூ. 3 ஆயிரத்தை விவசாயிகளுக்கு கொடுத்து வருகின்றன.

    மேலும் திருவாலாங்காட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு 2013-ம் ஆண்டு முதல் ரூ. 2 ஆயிரம் கோடி கடன் கொடுக்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் விவசாயிகள் ஆந்திராவில் உள்ள ஆலைகளுக்கு கரும்பு லாரிகளில் எடுத்து சென்று விற்று வருகின்றனர். மேலும் நலிந்த விவசாயிகளுக்கு ஆந்திராவில் உள்ள கரும்பு ஆலைகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று தருகின்றன.

    ஆலைகளுக்கு கரும்பு ஏற்றி சென்றவுடன் 12 மணி நேரத்தில் விவசாயிகளுக்கு பணம் கொடுத்து விடுகின்றனர். இயற்கை இடர்பாடுகளின் போது நஷ்டம் ஏற்படும் விவசாயிகளுக்கு உடினடியாக இழப்பீடு தொகையும் வழங்கப்படுகிறது.

    கரும்பு அறுவடைக்கு தொழிலாளர்களை இலவசமாக அனுப்பி வைத்து ஆலைகளுக்கு கரும்பு ஏற்றி செல்ல வாகனங்களும் அனுப்பப்படுகிறது.

    ஆனால் திருவாலாங்காட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு ஏற்றி சென்றால் அதை இறக்குவதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இதனால் கரும்பு எடை குறைந்து விடுவதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.

    விவசாயிகளுக்கு எந்தவித சலுகைகளும் இல்லாததால் ஊத்துக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஆந்திராவில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு கரும்புகள் அனுப்பி வைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஊத்துக்கோட்டையை சேர்ந்த விவசாயி பழனி, ஸ்ரீராமாபுரம் கிராமத்தை சேர்ந்த ரங்கப்ப நாயுடு ஆகியோர் அறுவடை செய்த கரும்பை வாடகை லாரிகளில் ஏற்றி கொண்டு நேற்று மாலை ஆந்திராவுக்கு புறப்பட்டனர்.

    இதை அறிந்த வேளாண் துறை உதவி இயக்குனர் ராமு, கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர் வேடியப்பன், போக்கு வரத்துறை ஆய்வாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் கரும்பு லாரிகளை மடக்கி பிடித்தனர்.

    தமிழகத்தில் இலவச மின்சாரம் பெற்று விவசாயம் செய்துவிட்டு கரும்பை ஆந்திராவுக்கு எப்படி எடுத்து சென்று விற்பீர்கள். இது சட்டப்படி குற்றம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    இதனை அறிந்த கரும்பு விவசாயிகள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் கரும்பு பாக்கித் தொகையை வழங்க வேண்டும் என்று லாரிகளை நிறுத்தியது ஏன் என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    ஊத்துக்கோட்டை தாசில்தார் கிருபாஉஷா, துணை தாசில்தார் கதிர்வேல், துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    இதைத் தொடர்ந்து தடுத்து நிறுத்திய லாரிகளை விடுவிக்க அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர். மேலும் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிலுவையில் உள்ள தொகையினை அரசிடம் இருந்து விரைவில் பெற்று விவசாயிகளுக்கு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×