search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் கன மழை: அடவி நயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு
    X

    நெல்லை மாவட்டத்தில் கன மழை: அடவி நயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்வு

    நெல்லை மாவட்டத்தில் மீண்டும் கன மழை பெய்ததால் அடவி நயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10.50 அடி உயர்ந்து இன்று காலை 123 அடி ஆனது.

    நெல்லை:

    ஒக்கி புயல் காரணமாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த வாரம் கனமழை பெய்தது. குமரி மாவட்டத்தில் கடும் சேதம் உண்டானது. நெல்லை மாவட்டத்தில் அணைகள், குளங்கள் நிரம்பின. பிரதான பாசன அணையான பாபநாசம் அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகள் நிரம்பின. சேர்வலாறு, மணிமுத்தாறு, வடக்குபச்சையாறு, அடவிநயினார் அணைகளும் நிரம்பி வருகின்றன.

    அணைகள், குளங்கள் நிரம்புவதால் பிசான சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாவட்டம் முழுவதும் மழை குறைந்து வெயில் அடித்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக நெல்லையில் கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. நேற்று இரவு முதல் மாவட்டத்தில் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

    குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இரவு தொடங்கிய மழை விடிய விடிய நீடித்தது. செங்கோட்டை மலைப் பகுதியில் உள்ள கருப்பாநதி அணைப்பகுதியில் தொடர்ந்து பெய்த கன மழையினால் அணையில் இருந்து உபரிநீர் அதிகமாக ஆற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால் கருப்பாநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல அடவிநயினார் அணை பகுதியிலும் கன மழை பெய்தது.

    143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 138 அடியாக இருந்தது. இந்த அணையில் இருந்தும், பாபநாசம் கீழணை, சேர்வலாறு அணைகளில் இருந்தும் நேற்று சுமார் 1500 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் அணை நீர்மட்டம் இன்று காலை 137.15 அடி ஆனது. அணைக்கு வினாடிக்கு 676 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை பாபநாசம் கீழணை, சேர்வலாறு அணைகளில் இருந்து சுமார் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளன.

    இந்த தண்ணீருடன் மணிமுத்தாறு பகுதியில் இருந்து வரும் உபரிநீர், கடனா அணை பகுதியில் இருந்து வரும் உபரிநீர் சேர்ந்து தாமிரபரணி ஆற்றில் வருவதால் ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 138.32 அடியாகவும், 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 111.65 அடியாகவும் அதிகரித்து உள்ளன.

    132.22 அடி உச்சநீர்மட்டம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் நேற்று 112.50 அடியாக இருந்தது.

    இப்பகுதியில் கன மழை பெய்ததால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10.50 அடி உயர்ந்து இன்று காலை 123 அடி ஆனது. அணைக்கு வினாடிக்கு வரும் 1250 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் அதிகபட்சமாக கருப்பாநதி அணையில் 192 மில்லிமீட்டர் மழை பதிவானது.

    அடவிநயினார் அணையில் 120 மில்லிமீட்டர் மழையும், குண்டாறில் 47 மில்லி மீட்டர் மழையும், ராமநதி அணையில் 10 மில்லிமீட்டர் மழையும், பாபநாசம் அணையில் 4 மில்லிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. அணைப்பகுதி தவிர தாலுகா பகுதிகளில் செங்கோட்டையில் 41 மில்லிமீட்டர், தென்காசியில் 36.2, ஆய்க்குடியில் 36 மில்லிமீட்டர், சிவகிரியில் 21 மில்லிமீட்டர், சங்கரன் கோவிலில் 11 மில்லிமீட்டர், சேரன்மகாதேவியில் 7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.


    Next Story
    ×