search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரடாச்சேரி அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி: 2 வாலிபர்கள் கைவரிசை
    X

    கொரடாச்சேரி அருகே ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி: 2 வாலிபர்கள் கைவரிசை

    கொரடாச்சேரி அருகே காவலாளியை தாக்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு காவலாளியாக தேவர் கண்ட நல்லூர் கிராமத்தை சேர்ந்த சாமிநாதன் (வயது 65) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சுமார் 25 வயது முதல் 30 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏ.டி.எம். மையத்துக்கு வந் தனர்.

    பின்னர் அவர்கள் 2 பேரும், ஏ.டி.எம். மைய காவலாளி சாமிநாதனை திடீரென தாக்கினர். இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

    அப்போது கும்பல் தாங்கள் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் சாமிநாதனை தாக்கினர். அதில் அவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் முகம், கை, கால்களில் படுகாயம் ஏற்பட்டது.

    இதையடுத்து 2 வாலிபர்களும் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து அதில் இருக்கும் பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அவர்கள் தொடர்ந்து போராடியும் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடிக்கவில்லை. இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த லட்சக்கணக்கில் வைக்கப்பட்டிருந்த பணம் தப்பியது.

    பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இதற்கிடையே வாலிபர்கள் தாக்கியதில் காயம் அடைந்த காவலாளி சாமிநாதனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் பற்றி கொரடாச்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற 2 வாலிபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காவலாளியை தாக்கி ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் கொரடாச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×