search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கழுகுமலை அருகே பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்
    X

    கழுகுமலை அருகே பலத்த மழை: காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

    கழுகுமலை அருகே காட்டாற்று வெள்ளத்தில் தற்காலிக தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதில், சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி நடுப்பகுதியில் சிக்கிக் கொண்டது.
    கழுகுமலை:

    தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை நீடித்தது. இதனால் கழுகுமலை அருகே உள்ள குமாரபுரம் ஓடையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    அந்த ஓடையின் பாலம் புதிதாக அமைக்கும் பணி தற்போது நடந்து வருவதால் பாலத்தின் அருகே தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு கழுகுமலை-கோவில்பட்டி இடையே போக்குவரத்து நடந்து வந்தது. இந்த தற்காலிக பாலத்தை மழை வெள்ளம் தொட்டப்படி சென்றது.

    இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கோவில்பட்டியில் இருந்து புளியங்குடிக்கு சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி அந்த தரைபாலத்தின் நடுப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது பாரம் தாங்காமலும், வெள்ளநீர் கரைபுரண்டு ஓடியதாலும் தரைப்பாலம் இடிந்து விழுந்தது.

    இதனால் லாரி பாலத்தின் நடுப்பகுதியில் சிக்கிக் கொண்டது. இதையடுத்து லாரி டிரைவரும், கிளீனரும் வேகவேகமாக லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். தரைப்பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இது குறித்து தகவலறிந்த கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி தலைமையிலான போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப்பொறியாளர் ஆண்ட்ரூஸ் ஆகியோர் விரைந்து வந்து சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

    பின்னர் அவர்கள் மாற்றுப்பாதையில் வாகனங்களை திருப்பி விடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். தரைப்பாலத்தில் கவிழ்ந்த லாரியை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டதால் கழுகுமலையில் இருந்து கோவில்பட்டிக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
    Next Story
    ×