search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஷால் வேட்பு மனுவை தள்ளுபடி செய்தது ஏன்?: தேர்தல் அதிகாரி விளக்கம்
    X

    விஷால் வேட்பு மனுவை தள்ளுபடி செய்தது ஏன்?: தேர்தல் அதிகாரி விளக்கம்

    நடிகர் விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது ஏன் என்பதற்கு ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி வேலுசாமி விளக்கம் அளித்துள்ளார்.

    சென்னை:

    நடிகர் விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது ஏன் என்பதற்கு ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி வேலுசாமி விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனு செய்த விஷால் கிருஷ்ணாவின் வேட்புமனு 72-வது மனுவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது விஷால் கிருஷ்ணாவை முன்மொழிந்துள்ள 10 பேரில் சிலரது நம்பகத்தன்மை பற்றி எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து நான் விஷால் கிருஷ்ணாவின் வேட்புமனு பரிசீலனையை ஒத்தி வைத்தேன்.

    பிறகு நான் விஷால் கிருஷ்ணா சார்பில் ஆஜரான வரை அழைத்து பேசினேன். அவரைத் தொடர்ந்து விஷால் கிருஷ்ணாவின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தவர்களிடமும் அவர்களது கருத்தை கேட்டேன்.

    விஷால் கிருஷ்ணாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள், சுமதி, தீபன் என்ற 2 பேரை என் முன்பு கொண்டு வந்து ஆஜர்படுத்தி நிறுத்தினார்கள். இதில் சுமதி என்பவர் பெயர், விஷாலின் வேட்பு மனுவை முன்மொழிந்த 10 பேரில் முதல் நபராக இடம் பெற்றிருந்தது. தீபன் என்பவர் பெயர் விஷாலை முன்மொழிந்தவர்களில் 9-வது பெயராக இடம் பெற்றிருந்தது.

    சுமதி, தீபன் இருவரும் என்னிடம், ‘‘நாங்கள் நடிகர் விஷாலை முன்மொழியவில்லை. விஷாலின் வேட்பு மனுவில் எங்கள் இருவரது பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் உள்ள கையெழுத்து எங்களது கையெழுத்து இல்லை’’ என்று கூறினார்கள்.

    அவர்கள் இருவரும் இதை என்னிடம் எழுத்துப் பூர்வமாகவும் கொடுத்தனர். அது வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சுமதி, தீபன் இருவரிடமும் நான் இது தொடர்பாக தனிப்பட்ட முறையிலும் விசாரணை நடத்தினேன். இந்த நிலையில் பிற்பகலில் விஷால் கிருஷ்ணாவும், அவரது பிரதிநிதிகளும் என் முன் ஆஜரானார்கள். அப்போது விஷால் என்னிடம் ஒரு ‘‘ஆடியோ கிளிப்’’பை ஓடவிட்டார்.

    அந்த ‘ஆடியோ கிளிப்’பில், விஷால் கிருஷ்ணாவும், சுமதியின் உறவினர் என்று கூறிக் கொள்ளும் ஒருவரும் பேசிக் கொண்ட உரையாடல் இடம் பெற்றிருந்தது. அதில், ‘‘தேர்தல் அதிகாரி முன்பு சுமதி தாமாக முன்வந்து ஆஜராகவில்லை. சிலர் அவரை மிரட்டி கடத்திச் சென்று ஆஜர்படுத்திவிட்டனர்’’ என்று இருந்தது.

    இதையடுத்து விஷால் தரப்பையும், அவரது எதிர்ப்பாளர் தரப்பையும் மீண்டும் அழைத்து பேசினேன். இரு தரப்பினரிடமும் நான் விசாரணை நடத்தினேன். நான் விசாரித்த வரை சுமதி, தீபன் இருவரும் தாமாகவே என் முன் வந்து ஆஜராகி இருப்பது தெளிவாக தெரிந்தது.

    தங்களது கையெழுத்து போலியாக போடப்பட்டு இருப்பதாக அவர்கள் கூறியதிலும் நியாயம் உள்ளது. மேலும் விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ‘‘ஆடியோ கிளிப்’’பில் உள்ள உரையாடலில் பேசுபவர் பற்றிய நம்பகத்தன்மையை உறுதிபடுத்த இயலவில்லை.

    இதன் காரணமாக விஷாலுக்கு போதுமான நபர்கள் முன்மொழியவில்லை என்ற முடிவுக்கு நான் வந்தேன். 10 பேருக்கு 8 பேர்தான் முன்மொழிந்துள்ளனர். எனவே விஷால் தனது வேட்பு மனுவை முழுமையாக பூர்த்தி செய்ய வில்லை என்று முடிவு செய்தேன்.

    ஆகையால் விஷால் கிருஷ்ணா வேட்பு மனுவை நான் நடத்திய விசாரணையின் அடிப்படையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டேன்.

    இவ்வாறு தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

    Next Story
    ×