search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அ.தி.மு.க.வை எதிர்க்க தகுதி இல்லாதவர் நடிகர் விஷால்: அமைச்சர் செல்லூர் ராஜூ
    X

    அ.தி.மு.க.வை எதிர்க்க தகுதி இல்லாதவர் நடிகர் விஷால்: அமைச்சர் செல்லூர் ராஜூ

    அ.தி.மு.க.வை எதிர்க்க தகுதி இல்லாதவர் நடிகர் விஷால் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
    மதுரை:

    மதுரையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தின அமைதி பேரணி அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மேல மாசிவீதி-தெற்கு மாசிவீதி சந்திப்பில் தொடங்கி வடக்கு மாசிவீதி சந்திப்பு வரை நடந்தது. பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள், அ.தி.மு.க. தொண்டர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த அமைதி பேரணியில் திரண்டு வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    இதைத்தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் அம்மா எங்களை விட்டு சென்று ஓராண்டு ஆகிறது. தாயை இழந்த பிள்ளைகளாக நாங்கள் தவித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனாலும் இந்த ஆட்சியும், கட்சியும் இன்னும் நூறு ஆண்டுகள் தமிழக மக்களுக்கு சேவை செய்யும் என்ற அம்மாவின் லட்சியத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பாக செய்து வருகிறோம்.

    ஆனால் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த அரசை குறைகூறுவதையே வழக்கமாக கொண்டு இருக்கிறார். புயல், மழை உள்ளிட்ட எந்தவிதமான மக்கள் பிரச்சனையிலும் இந்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    பாதிக்கப்பட்ட மக்களை நேரிடையாக சந்தித்து தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருகிறோம். சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டு இழப்பீடு வழங்குவதற்கு இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாங்கள் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றி வருகிறோம்.

    ஆனால் டி.டி.வி.தினகரன் மாடியில் இருந்து மக்களை சந்திப்பவர். அ.தி.மு.க.விற்கு நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான். இதற்கான தீர்மானத்தை பொதுக்குழுவில் நிறைவேற்றி தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளோம்.

    எனவே அ.தி.மு.க. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அமோக வெற்றிபெறும். தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ள திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சிகள் சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க.வை விமர்சித்தவர்கள். ஆனால் இப்போது தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறுகிறார்கள். இதை மக்கள் எப்படி ஏற்பார்கள்.

    மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். எங்களை தேர்தல் களத்தில் எதிர்க்ககூடிய சக்தி தி.மு.க. வுக்கு மட்டுமே உண்டு. நாங்கள் தி.மு.க.வை மட்டுமே எதிரியாக பார்க்கிறோம். எதிரியாக இருப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும்.

    நடிகர் விஷால் நேற்று பெய்த மழையில் இன்றைக்கு முளைத்த காளான் போன்றவர். அவர் அ.தி.மு.க.வை எதிர்க்க தகுதியானவர் அல்ல.

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோரை மட்டுமே சினிமா துறையில் இருந்து மக்கள் ஏற்றுக் கொண்டனர். வேறு யாரையும் ஏற்றுக்கொள்ள மாட் டார்கள். அவர்களது கனவு பலிக்காது.

    எங்களை வீழ்த்த பலர் முயற்சிக்கிறார்கள். அவர்களால் முடியாது. யார் எந்த பக்கம் இருந்தாலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பல ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் மதுசூதனன் வெற்றி பெறுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×