search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் செய்யப்பட்ட நிவாரண பணிகள் என்ன? :  அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
    X

    குமரி மாவட்டத்தில் செய்யப்பட்ட நிவாரண பணிகள் என்ன? : அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் அரசு மேற்கொண்டுள்ள நிவாரண பணிகள் என்ன? என்பது குறித்து 7ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க அரசுக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
    மதுரை:

    கன்னியாகுமரியைச் சேர்ந்த வில்சோ டாஸ்பின் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஒக்கி புயலால் 50 ஆயிரம் மரங்களும், 6 ஆயிரம் மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளன. சாலை போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

    கடந்த நவம்பர் 30-ந்தேதி முதல் மின் இணைப்பு இல்லாத நிலையில் குமரி மாவட்டம் இருளில் மூழ்கியுள்ளது. குடிநீர், உணவு, மருத்துவம், போக்குவரத்து, மின்சாரம் என அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காத நிலையில் தற்போது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் தவறி விட்டது. காவல் துறையினரும் முறையாக பாதுகாப்பில் ஈடுபடாத காரணத்தால் ஒக்கி புயலை பயன்படுத்தி திருட்டு முயற்சிகளும் நடைபெற்றுள்ளன.

    ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள குமரி மாவட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிகிச்சை அளிக்க போதுமானதாக இல்லை. அடிப்படை தேவைகளை பாதிக்கப்பட்டோரிடம் கொண்டு செல்ல ஆட்கள் பற்றாக்குறையும் உள்ளது.


    எனவே ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிநீர், உணவு, மின்சாரம், போக்குவரத்து, காவல் துறை பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால், தாரணி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் மத்திய-மாநில அரசுகள் குமரி மாவட்ட மக்களுக்கு தேவையான மருத்துவ வசதி, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செய்து தர வேண்டும்.

    இது தொடர்பான அறிக்கையை நாளை மறுநாள் (7-ந்தேதி) கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
    Next Story
    ×