search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தேர்தல் நியாயமாக நடக்குமா?: அன்புமணி ராமதாஸ் கேள்வி
    X

    ஆர்.கே.நகர் தேர்தல் நியாயமாக நடக்குமா?: அன்புமணி ராமதாஸ் கேள்வி

    ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்ததற்கு காரணமாக இருந்தவர்களே மீண்டும் போட்டியிடுவதால் தேர்தல் நியாயமாக நடக்குமா என்று பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
    வந்தவாசி:

    வந்தவாசியில் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டதாக உள்ளது. தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக தென்பெண்ணை ஆற்றிலும், செய்யாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நீர் வீணாக கடலில் கலக்கிறது.

    இந்த இரண்டு ஆற்றையும் இணைக்க வேண்டும். நீர் மேலாண்மையை மேம்படுத்த திராவிட கட்சிகள் முயற்சிக்கவில்லை. கடந்த மாதம் வறட்சி, இந்த மாதம் வெள்ளம், தை மாதம் மீண்டும் வறட்சியாக இருக்கும்.

    கர்நாடகத்தில் பாலாறு 93 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் நிலையில் அங்கு 18 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. அதேபோல் 32 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே பாலாறு ஓடும் ஆந்திராவின் குறுக்கே 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

    ஆனால் தமிழகத்தில் அதிக கிலோ மீட்டர் தூரம் ஓடும் இந்த ஆற்றில் ஒரே ஒரு தடுப்பணை மட்டுமே கட்டப்பட்டுள்ளது.

    வரும் காலத்தில் நீர் பிரச்சினை தான் அதிகமாக இருக்கும். எனவே தமிழகத்தில் உள்ள ஆறுகளில் ஒவ்வொரு 5 கிலோ மீட்டருக்கும் 1 தடுப்பணை கட்ட வேண்டும்.

    ‘ஒக்கி’ புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரண நடவடிக்கைக்கு தமிழக அரசு ரூ.25 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. ஆனால் ரூ.500 கோடி செலவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் ரூ.1,700 கோடி நிலுவைத் தொகை கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளதை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஆர்.கே.நகர் தொகுதியில் நடப்பது இடைத்தேர்தல் இல்லை, அது ‘எடைத் தேர்தல்’. கடந்த சில மாதங்களுக்கு முன் அங்கு ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டதால் அந்த இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

    ஓட்டுக்கு பணம் வழங்கிய விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது, அப்போது போட்டியிட்டவர்களே இப்போதும் போட்டியிடுகிறார்கள், தேர்தல் எப்படி நியாயமாக நடக்கும். இடைத்தேர்தலில் போட்டியிடும் நடிகர் விஷாலுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    Next Story
    ×