search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 6-வது நாளாக குடிநீர் - மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவிப்பு
    X

    குமரி மாவட்டத்தில் 6-வது நாளாக குடிநீர் - மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவிப்பு

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் காரணமாக 6-வது நாளாக குடிநீர், மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரியில் கடந்த 30-ந்தேதி வீசிய ஒக்கி புயல் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தியது.

    2 மணி நேரம் சுழன்று அடித்த சூறாவளி காற்று 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்களையும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்களையும் வேரோடு வீழ்த்தியது. காற்றுடன் மழையும் பெய்ததில் மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.

    முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் 29-ந்தேதியே மின் விநியோகத்தை துண்டித்தது. இதனால் பெரிய அளவில் உயிர் இழப்பு தடுக்கப்பட்டது.

    புயல் ஓய்ந்து இன்றுடன் 5 நாட்கள் ஆகி விட்டது. ஆனாலும் துண்டிக்கப்பட்ட மின்சாரம் இதுவரை விநியோகிக்கப்படவில்லை. 6 நாட்களாக குமரி மாவட்ட மக்கள் இருளில் தவிக்கிறார்கள்.

    மின் விநியோகத்தை சீரமைக்க மாநில அரசு வெளி மாவட்டங்களில் இருந்து மின் ஊழியர்களை வரவழைத்து சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது. ஆனாலும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு இன்னும் மின்சப்ளை வழங்கப்படவில்லை.

    மின்சாரம் இல்லாததால் இதுவரை குடிநீர் சப்ளையும் நடைபெறவில்லை. நாகர்கோவில் உள்பட பெரும்பாலான ஊர்களில் மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை இன்னும் தீரவில்லை.

    தண்ணீர் கிடைக்காததால் வல்லன்குமாரன்விளை, பீச் ரோடு சந்திப்பு, ராமன்புதூர், செட்டிக்குளம் பகுதிகளில் உள்ள மக்கள் ஆங்காங்கே போராட்டம், மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதே நிலை மாவட்டத்தின் பிற ஊர்களிலும் உருவானது.

    குமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் நிவாரண பணிகளை முடுக்கி விட வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் முகாமிட்டுள்ளனர்.

    துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் நேற்று நாகர்கோவில் வந்து நிவாரண பணிகளை துரிதப்படுத்தினார்.

    மின்சார விநியோகம் தாமதம் ஆவது குறித்து அமைச்சர் தங்கமணி கூறும் போது, நாகர்கோவில் நகர் பகுதியில் உள்ள தெருக்கள் குறுகியதாக இருப்பதால் உடைந்த மின்கம்பங்களை அகற்றி புதிய கம்பங்கள் அமைக்க கால தாமதம் ஆகிறது. கூடுதல் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு இந்த பணி வேகப்படுத்தப்படும் என்றார்.

    குமரி மாவட்டத்தின் உட்புற பகுதிகளில் மின்சாரம், குடிநீரின்றி தவித்து வரும் நிலையில் கடலோர கிராம மக்கள் கடலுக்கு சென்ற மீனவர்கள் கதி என்ன? என்பதை அறிந்து கொள்ள முடியாமல் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

    ஒக்கி புயல் எச்சரிக்கை விடும் முன்பே கடலுக்கு சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. அவர்களை உடனடியாக மீட்டு கரைக்கு கொண்டு வர வேண்டுமென்று மாயமான மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலில் மாயமான மீனவர் களை தேடும் பணியை முடுக்கி விட மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீத்தாராமன் நேற்று குமரி மாவட்டம் வந்தார். அவரிடம் மீனவ பிரதிநிதிகள் பலரும் கடலில் மாயமான மீனவர்களை கடற்படை கப்பல்கள் மூலம் தேடி கண்டுபிடித்து மீட்டு வர வேண்டுமென்று மனு கொடுத்தனர்.

    குமரி மாவட்ட கிறிஸ்தவ பாதிரியார்கள் அளித்த மனுவில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 254 விசைப்படகுகள் மாயமாகி இருப்பதாகவும், இதில் மீன்பிடிக்க சென்ற 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களை மீட்டுத்தர வேணடும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலில் மாயமான மீனவர்களில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 2 மீனவர்களின் உடல்கள் இதுவரை கரை ஒதுங்கி உள்ளது. இதுபோல கேரள கடல் பகுதியில் 18 பேரின் உடல்கள் கரை ஒதுங்கி உள்ளன. அவை திருவனந்தபுரம், கொல்லம் அரசு ஆஸ்பத்திரிகளில் வைக்கப்பட்டுள்ளது. அந்த உடல்களில் சில அழுகிய நிலையில் உள்ளன. இதில் குமரி மீனவர்கள் யாரும் உள்ளனரா? என்பதை அடையாளம் காண குமரி மாவட்ட மீனவ அமைப்பினர் கேரள சென்றுள்ளனர்.

    மீனவர்களின் உடல்கள் ஒவ்வொன்றாக கரை ஒதுங்கி வருவதால் குமரி மாவட்ட மீனவ மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். மாயமான மீனவர்களை உடனடியாக மீட்காவிட்டால் மீனவ குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள். அதற்கு முன்பு தேடும் பணியை முடுக்கி விட வேண்டுமென்று கூறி அவர்கள் போராட்டத்திலும் குதித்தனர்.

    இதுபற்றி தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் பாதிரியார் சர்ச்சில் கூறியதாவது:-

    குளச்சலில் இருந்து கடலுக்கு சென்ற விசைப்படகில் இருந்த 15 மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கி கடலில் விழுந்தனர். இவர்களில் 3 பேர் மீட்கப்பட்டனர். மற்றவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. இதுபோல பல படகுகளில் இருந்த மீனவர்கள், கடல் கொந்தளிப்பில் சிக்கி அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

    ஆனால் மாயமான மீனவர்கள் குறித்து அரசு வெளியிடும் தகவலில் முரண்பாடு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெய்தல் மக்கள் இயக்க மாவட்ட செயலாளர் பெர்லின் கூறியதாவது:-

    ஒக்கி புயல் தாக்கும்போது, 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுமென்று கூறப்பட்டது. ஆனால் அதை விட அதிகமான வேகத்தில் காற்று வீசியுள்ளது. இதனால் ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றவர்கள் புயலில் சிக்கிக் கொண்டனர்.

    குமரி மாவட்டத்தில் புயல் வீசுமென்று புயல் எச்சரிக்கை கூண்டு எதுவும் ஏற்றவில்லை. மீனவர்கள் புயலில் சிக்கிக் கொள்ள இதுவும் ஒரு காரணமாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். 


    Next Story
    ×