search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார்: வைகோ
    X

    எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்படுகிறார்: வைகோ

    தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாக பணியாற்றுகிறார் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.
    சென்னை:

    ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் மருதுகணேசுக்கு ஆதரவு அளிப்பதாக ம.தி.மு.க. அறிவித்துள்ளது.

    இதன் மூலம் 13 ஆண்டு இடைவெளிக்கு பிறகு தி.மு.க.வுடன் ம.தி.மு.க. இணைந்துள்ளது.

    இதுதொடர்பாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம்:-

    கேள்வி: கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் தி.மு.க.வை கடுமையாக விமர்சித்து வந்தீர்கள். 11 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நீங்கள் இப்போது தேர்தல் களத்தில் தி.மு.க.வுடன் ஒன்றிணைந்து இருக்கிறீர்கள். என்ன காரணத்தால் இந்த முடிவு எடுத்தீர்கள்?


    பதில்: தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலையும், அ.தி.மு.க. அரசு நடந்து கொள்ளும் விதமும் மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கும் வகையில் உள்ளது. அ.தி.மு.க. அரசு ஒட்டுமொத்தமாக பா.ஜ.க. அரசிடம் சரண் அடைந்துவிட்டது. அறிஞர் அண்ணா மாநில சுயாட்சிக்காக குரல் கொடுத்தவர். அவரை பின்பற்றி கருணாநிதியும் செயல்பட்டு வந்தார். தற்போது கூட்டாட்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக பாரதிய ஜனதா அரசு உள்ளது.

    முல்லைப்பெரியாறு, காவிரி பிரச்சனை, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, ‘நீட்’ தேர்வு விவகாரம் போன்றவற்றில் தமிழ்நாட்டு நலனை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு செயல்படவில்லை. இது திராவிட இயக்கங்களை தட்டி எழுப்பும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது. இந்த நிலையில் தான் எங்களது கட்சி உயர்மட்டக்குழு கூடி ஆர்.கே. நகரில் தி.மு.க. வேட்பாளரை ஆதரிப்பது என்று ஏகமனதாக முடி வெடுத்துள்ளது.

    கே: இந்த கூட்டணி எதிர் காலத்திலும் தொடருமா?

    ப: இது ஒரு தொடக்கம். நாங்கள் ஆதரவு அளிப்பதாக முடிவெடுத்ததுமே மு.க. ஸ்டாலின் என்னிடம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். தி.மு.க. - ம.தி.மு.க. இடையே ஏற்கனவே இருந்தது ஒரு சிறிய பிளவுதான். அது தற்போது நீக்கப்பட்டு வருகிறது. எங்களுடைய கூட்டணி என்பது சகோதரத்துவமானது. இது எதிர்காலத்திலும் ஒருங்கிணைப்போடு இருக்கும்.


    கே: தி.மு.க. செயல் தலைவராக இருக்கும் மு.க. ஸ்டாலின் அவரது கட்சியை வழிநடத்தி செல்வதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

    ப: மு.க.ஸ்டாலின் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்துள்ளார். அவர் சிறந்த அனுபவம் பெற்ற தலைவர். பல்வேறு கஷ்டமான நிலைகளையும் சந்தித்தவர். மிசா காலத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டவர். அவருடைய தலைமை மிக சிறப்பாக இருக்கிறது. அவரை தி.மு.க.வின் அடிமட்ட தொண்டர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஸ்டாலின் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் சிறந்த தலைவராக செயல்படுகிறார். அது மட்டுமல்ல சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக மிகச்சிறப்பாக பணியாற்றுகிறார்.

    கே: இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக தி.மு.க. - ம.தி.மு.க. இடையே மாறுபட்ட நிலைகள் இருந்தன. இப்போது இலங்கை பிரச்சனையில் ஒரே கருத்தில் இருக்கிறீர்களா?

    ப: எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு நிலை இருக்கும். இலங்கை தமிழர் பிரச்சனையில் பல்வேறு காலகட்டத்திலும் தி.மு.க. அதுதொடர்பான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை சபையில் சிங்கள ஏஜெண்டுகள் சிலர் என்னை முற்றுகையிட முயன்ற சம்பவத்திற்கு எதிராக மு.க. ஸ்டாலின் முதல் ஆளாக குரல் கொடுத்தார்.

    கே: மக்கள் நல முன்னணியில் நீங்கள் ஒரு அங்கமாக திகழ்ந்தீர்கள். கடந்த ஆண்டு அது சிதைந்துவிட்டது. அது தமிழ்நாட்டில் 3-வது அணியாக செயல்படுமா?


    ப: நாங்கள் பல கட்சிகளையும் ஒருங்கிணைந்து கொண்டு வருவதற்கு முயற்சித்தோம். ஆனால் அது பயனற்றதாகிவிட்டது.

    கே: தற்போது சில நடிகர்கள் அரசியலுக்குள் நுழையலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிலர் சமூக வலைதளங்கள் மூலமாக பல்வேறு வி‌ஷயங்களில் குரல் கொடுத்து வருகிறார்கள். இது சம்மந்தமாக உங்கள் கருத்து என்ன?

    ப: வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தேர்தலில் போட்டியிடலாம். இதுசம்மந்தமாக மேலும் கருத்துக்களை சொல்ல விரும்பவில்லை.

    இவ்வாறு வைகோ கூறினார்.
    Next Story
    ×